×

சுடுகாட்டில் சடலம் தகனத்திற்கு வரட்டி தான் இனி எரிபொருள்: எஸ்டிஎம்சியில் தீர்மானம் நிறைவேற்றம்

புதுடெல்லி: மாட்டு சாணத்தில் தயாரிக்கப்படும் எருமூட்டையை (வரட்டி) சுடுகாட்டில் சடலம் தகனம் செய்வதற்கு எரிபொருளாக பயன்படுத்தும் தீர்மானம் தெற்கு டெல்லி மாநகராட்சி (எஸ்டிஎம்சி) பேரவை கூட்டத்தில் நிறைவேறியது.
எஸ்டிஎம்சியின் நான்கு மண்டலங்களைச் சேர்ந்த 104 வார்டுகளுக்கும் பொதுவான சுடுகாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக 90 ஆயிரம் சடலங்கள் தகனம் செய்யப்படுகிறது. விறகை பயன்படுத்தி மயானத்தில் சடலத்தை தகனம் செய்கின்றனர். விறகுக்காக மரங்களை அழிப்பதால், சுற்றுச்சூழல் பாதிப்பு உருவாகிறது. சுற்றுச்சூழல் சீர்கேட்டை கட்டுப்படுத்தும் விதமாக விறகுக்கு மாற்றாக வேறு எரிபொருள் பயன்படுத்துவது என எஸ்டிஎம்சியில் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. இந்த சூழலில், மனித ஆன்மா சாந்தியடைய மாடு காரணம் என எஸ்டிஎம்சி நிலைக்குழு உறுப்பினர்களுக்கு எடுத்துரைத்து, மாட்டு சாணத்தை வைக்கோலுடன் கலந்து தயாராகும் வரட்டியில் சடலத்தை எரியூட்டலாம் என பரிந்துரை செய்யப்பட்டது.

பரிந்துரை ஏற்ற எஸ்டிஎம்சி நிலைக்குழு, அது தொடர்பாக வரைவு தீர்மானம் தயாரித்து எஸ்டிஎம்சி மருத்துவ மீட்பு மற்றும் பொது சுகாதார கமிட்டிக்கு நவம்பர் 9ல் அனுப்பியது. அந்த பரிந்துரைக்கு சம்மதம் தெரிவித்த கமிட்டி, கோப்பை பின்னர் எஸ்டிஎம்சி மேயருக்கு அனுப்பியது. ஞாயிறன்று நடைபெற்ற எஸ்டிஎம்சி பேரவை கூட்டத்தில் மாள்வியா நகர் வார்டு பாஜ கவுன்சிலர் நந்தினி சர்மா, விறக்குக்கு மாற்று எரிபொருளாக சுடுகாட்டில் இனிமேல் வரட்டி பயன்படுத்த வேண்டும் எனும் அந்த தீர்மானத்தை பேரவையில் முன் மொழிந்தார். கவுன்சிலர் ராஜீவ் குமார் அதனை வழி மொழிந்தார். அதையடுத்து தீர்மானம் பேரவையில் ஏகமனதாக நிறைவேறியதாக எஸ்டிஎம்சி மேயர் அனாமிகா தெரிவித்தார். இது தொடர்பாக மேயர் வெளியிட்ட அறிக்கை விவரம்: எஸ்டிஎம்சி சுடுகாடுகளில் சடலங்களை எரியூட்ட விறகு பயன்பாடு நிறுத்த்ப்படுகிறது. எருமாட்டு சாணத்துடன் வைக்கோல் கலந்து தயாராகும் வரட்டிக்கு மட்டுமே சடலம் தகனத்திற்கு இனிமேல் அனுமதிக்கப்படும்.

வரட்டி அப்பளம் அளவில் சிறியதாக இருப்பதாக பலரும் குறை தெரிவித்து உள்ளனர். எனவே, செங்கல் வடிவில் வரட்டிய தயாரிக்க சுடுகாட்டில் சூளை அமைக்கப்படும். சில தொண்டு நிறுவனங்கள் இதற்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளன. இப்படி தயாராகும் வரட்டிகள் நீண்ட நேரம் நிலைத்து நின்று எரியும். விறகை காட்டிலும் வரட்டி விலை குறைவானது. மேலும் வரட்டியில் சடலத்தை எரியூட்டுவது பாரம்பரிய பழக்கமாகவும் இருந்துள்ளது. எனவே, வெகு விரைவில் எஸ்டிஎம்சி சுடுகாடுகளில் செங்கல் வடிவில் வரட்டி கிடைக்கும். இவ்வாறு அறிக்கையில் அனாமிகா தெரிவித்து உள்ளார்.

Tags : crematorium ,STMC , Fuel for cremation in crematorium is no longer just fuel: Resolution passed at STMC
× RELATED 30 குண்டுகள் முழுங்க...