ஆர்எஸ்எஸ் அமைப்பால் கன்னட மக்களின் சுயமரியாதைக்கு பாதிப்பு : தினேஷ்குண்டுராவ் குற்றச்சாட்டு

பெங்களூரு:ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கன்னட மக்களின் சுயமரியாதைக்கு அடிக்கடி பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றனர் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. தினேஷ்குண்டுராவ் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில் கூறியதாவது: தாய்மொழி மீது நம்பிக்கையில்லாத பா.ஜ. தலைவர்கள் தங்களுடைய சுயமரியாதையை மறந்து அனைத்து கன்னடர்களையும் இந்தி மொழியின் குலாம்கள் போல் செய்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்ட பா.ஜ. அரசு, வரும் நாட்களில் இந்தி மொழி கட்டாயம் என்ற சட்டம் கொண்டு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் கிடையாது.  ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அடிக்கடி கன்னட மக்களின் சுயமரியாதைக்கு பாதிப்பு ஏற்படுத்தி வருகின்றனர். இவர்களின் நடவடிக்கையால் மாநில மக்கள் பாதித்து வருகின்றனர்.  

அதேபோல், குடியரசு தினத்தில் கூட இந்தி மொழிக்கு முன்னுரிமை வழங்கும் நிகழ்ச்சிகள் நடத்த அரசு முடிவு செய்துள்ளது. பா.ஜ. அரசு ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் ஏன் என்று கேள்வி எழுப்பினார்.  மாநில அரசின் நடவடிக்கையால் கன்னடர்கள் இந்திக்கு குலாம்கள்போல் ஆகியுள்ளனர். அதே போல் கன்னட கொடிக்கு பதில் காவி கொடிகள் நட்டுவைக்க இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள் என்று கேள்வி எழுப்பினார். பா.ஜ.வினர் கன்னட மக்களை ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரிடம் அடகு வைத்துள்ளதா என்று கேள்வி எழுப்பினார். பா.ஜ.வினரின் அனைத்து நடவடிக்கைகளையும் காங்கிரஸ் உன்னிப்பாக கவனித்து வருகிறது. இவர்களின் நடவடிக்கைகளுக்கு வரும் நாட்களில் மக்கள் சரியான பாடம் கற்று கொடுப்பார்கள் என்று தெரிவித்தார்.

Related Stories:

>