புரோட்டா தயாரிக்கும் நவீன இயந்திரம்: அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்

மேலூர்: மேலூர் அரசு பள்ளியில் படிக்கும் இரட்டை சகோதரர்கள் நவீன முறையில் இயங்கும் புரோட்டா தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்து அசத்தியுள்ளனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகில் உள்ள வஞ்சிநகரத்தை சேர்ந்த கண்ணன் மகன்கள் பாலசந்தர், பாலகுமார். இரட்டையர்களான இவர்கள் மேலூர் அரசு ஆண்கள் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகின்றனர். அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் உள்ள இவர்கள் சிறு சிறு அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஈடுபடுவது வழக்கம். இவர்களுக்கு மேலூரில் லேத் பட்டறை வைத்துள்ள  உறவினர் செந்தில் ஆலோசனை மற்றும் உதவிகள் செய்து வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு இவர்கள் மேலூரில் தானியங்கி ஆம்புலன்ஸ் வசதியை ஜிபிஎஸ் மூலம் உருவாக்கி, அந்தந்த சிக்னல்களில் ஆம்புலன்ஸ் வரும் 5 நிமிடங்களுக்கு முன் கூட்டியே எச்சரிக்கை ஒலி எழுப்பும் வகையில் புதுமையான கண்டுபிடிப்பை உருவாக்கி அசத்தினர். இதனை தமிழக முதல்வர், அமைச்சர்கள் மற்றும் மதுரை எம்பி வெங்கடேசன் உட்பட பலரும் ட்விட்டரில் பாராட்டினர். தற்போது இவர்கள் தற்போது நவீன புரோட்டா தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த கருவி மின்மோட்டார் மற்றும் ஹைட்ராலிக் இயந்திர உதவியுடன் செயல்படுகிறது.

புரோட்டாவிற்காக பிசைந்த மாவை இந்த கருவியில் வைத்தால் புரோட்டாவுக்கு தேவையான மாவுகள் பிசைந்து வீச்சாக வெளிவருகிறது. அதனை எடுத்து மடித்து தட்டி தோசைக்கல்லில் போட்டால் புரோட்டா ரெடியாகிறது. இதனால் எண்ணெய் செலவு மிச்சமாகிறது. இந்த மிஷின் மூலம் மணிக்கு 500 புரோட்டாக்கள் தயார் செய்ய முடியும். இந்த இயந்திரம் மூலம் புரோட்டா மட்டுமல்ல சப்பாத்தி, நூடுல்ஸ், இடியாப்பம் உள்ளிட்டவைகளும் தயார் செய்ய முடியும். இதற்கான செலவு தற்போது ரூ.2.5 லட்சம் வரை ஆவதாகவும், அதிகளவு உற்பத்தி செய்யும் போது இதன் விலை குறைய வாய்ப்புள்ளதாக இரட்டை சகோதரர்கள் தெரிவித்தனர்.

Related Stories:

>