×

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தவர்களுக்கு வீடுகளுக்கே சென்று அடையாள அட்டை வழங்கப்படும்!: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு..!!

சென்னை: வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தவர்களுக்கு வீடுகளுக்கே சென்று அடையாள அட்டை வழங்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தேசிய வாக்காளர் தினவிழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், வாக்காளர்கள் உடனுக்குடன் நவீன வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கான பிரத்யேக இணையதள சேவையை துவங்கி வைத்தார்.

விழாவில் பேசிய ஆளுநர், தமிழகத்தில் 6 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருக்கின்றனர் என்றும் எவ்வித பயமும் இன்றி வாக்காளர்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். விழா முடிந்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, வாக்காளர் அட்டை பெறுவது எளிதாக்கப்பட்டுள்ளது என்றார். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நவீன வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கான சேவை 38 மாவட்டங்களிலும் ஒரு மாதத்திற்குள் முடிந்து, மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்தார்.

மேலும் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தவர்களுக்கு வீடுகளுக்கே சென்று வாக்காளர் அட்டை வழங்கப்படும் என குறிப்பிட்டார். விழாவில் தலைமை செயலாளர் சண்முகம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கோவிந்தசாமி, சென்னை மாவட்ட ஆட்சியர் சீதா லட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர்.


Tags : voters ,homes ,Satyaprada ,Chief Electoral Officer , Voter list, name, house, identity card, election official
× RELATED சட்டமன்ற உறுப்பினர்கள்...