×

பொங்கல் பரிசு தொகுப்பு ரூ2500 பெற இன்றே கடைசி நாள்: வாங்காதவர்கள் மாலைக்குள் பெற அறிவுறுத்தல்

சென்னை: தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்புடன் கூடிய ரூ.2500 பணத்தை பெற இன்றே கடைசி நாள் என்பதால், இதை வாங்காத ரேசன் அட்டைதாரர்கள் இன்று மாலைக்குள் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு பொங்கலை முன்னிட்டு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், ஒரு முழு கரும்பு, துணிப்பை உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை அறிவித்தது. இதனுடன் ரூ.2,500 பணத்தை வழங்கியது. அதன்படி சுமார் 2 கோடியே 10 லட்சம் குடும்ப அட்டைதாரருக்கு இந்த பொங்கல் தொகுப்பு வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டு கடந்த 4ம் தேதி முதல் வழங்கப்பட்டது.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஒரு நாளைக்கு 200 பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டது. மேலும் குறிப்பிட்ட நாளில் பொருட்கள் வாங்க முடியாவிட்டால், கடைசி நாளான 13ம் தேதி சென்று வாங்கி கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கான அவகாசமும் முடிவடைந்த நிலையில், பொங்கல் கொண்டாட, மக்கள் சொந்த ஊர் சென்றது உள்ளிட்ட காரணங்களால், மூன்று லட்சம் கார்டுதாரர்கள், பரிசு தொகுப்பு வாங்காமல் இருந்தனர். இதனால் விடுபட்ட கார்டுதாரர்கள் 18ம் தேதி முதல் 25ம் தேதி வரை, பொங்கல் பரிசு வாங்கிக் கொள்ள, உணவு வழங்கல் துறை அவகாசம் அளித்தது.

இந்த அவகாசம் இன்றுடன் முடிகிறது. இதுவரை, பரிசு தொகுப்பு வாங்காதவர்கள் இன்று மாலைக்குள் வாங்கிக் கொள்ளலாம். இனி இதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Pongal , Today is the last day to get the Pongal gift package of Rs. 2500: Advice for non-buyers to get it by evening
× RELATED குற்றாலம் செண்பகாதேவி அம்மன் கோயிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா