×

கட்சிக்கு எதிராக துரோகம் இழைத்ததால் நடவடிக்கை!: காங்கிரசில் இருந்து புதுவை அமைச்சர் நமசிவாயம் தற்காலிக நீக்கம்..!!

புதுச்சேரி: காங்கிரஸ் கட்சியில் இருந்து புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிகமாக நீக்கப்படுவதாக மாநில தலைவர் அறிவித்துள்ளார். புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் அமைச்சராக இருப்பவர் நமச்சிவாயம். பொதுப்பணித்துறை, கலால்துறை, உள்ளாட்சித்துறை போன்ற முக்கிய பொறுப்புகளில் அவர் அமைச்சராக இருந்து வந்தார். அமைச்சரவையில் முதல்வர் நாராயணசாமிக்கு அடுத்ததாக இரண்டாவது அமைச்சராக நமச்சிவாயம் உள்ளார். கடந்த சில மாதங்களாக முதல்வர் நாராயணசாமி, தன்னுடைய துறைக்கு உட்பட பணிகளை செய்வதற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறார். தனக்கு அதிகாரம் அளிப்பதில்லை. கட்சியில் உரிய மரியாதை இல்லை என்று கோரிக்கையை முன்வைத்து அமைச்சர் நமச்சிவாயம் அதிருப்தி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாஜக-வை சேர்ந்த முக்கிய தலைவர்கள் சிலர் அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து பாஜக-வில் சேரும்படியும், பாஜக-வில் சேர்ந்தால் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கிறோம் என்றும்  கோரிக்கைவிடுத்தனர். இதனை ஏற்றுக்கொண்ட அமைச்சர் நமச்சிவாயம், கடந்த 4 நாட்களாக தனது தொகுதி நிர்வாகிகளையும், முக்கிய ஆதரவாளர்களையும் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார். ஆலோசனையின் இறுதியில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜக-வில் சேர்வது என்று முடிவு எடுக்கப்பட்டது. முடிவின் படி சிறிது நேரத்தில் அமைச்சர் நமச்சிவாயம் தன்னுடைய எம்.எல்.ஏ., அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளார்.

இதற்காக அவர் தனது சொந்த ஊரான வில்லியனூரில் இருந்து புறப்பட்டு சட்டப்பேரவை நோக்கி வந்து கொண்டுள்ளார். இந்நிலையில் புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியம் அவசரமாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் கட்சிக்கு துரோகம் செய்து வேறு கட்சிக்கு செல்ல தயாராகி வருகிறார். ஆதலால் கட்சிக்கு எதிராக துரோகம் இழைத்ததால் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார். அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நமச்சிவாயம் தற்காலிகமாக நீக்கப்படுகிறார் என தெரிவித்தார்.

Tags : Namasivayam ,party ,Congress , Party, betrayal, Congress, New Minister Namasivayam, dismissal
× RELATED நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி...