×

அரசு ரப்பர் கழகத்தில் ஊடு பயிருக்கு குத்தகை விடுவதில் முறைகேடு-போட்டி ஏலத்தில் ஈடுபடுபவர்களை மிரட்டும் அதிகாரிகள்

குலசேகரம் :  குமரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் ரப்பர் உலகில் தரம்  வாய்ந்தது. இதனால் ரப்பர் விவசாயம் முன்னோடி விவசாயமாக  உள்ளது. தமிழக அரசு காமராஜர் ஆட்சி காலத்தில் வேலைவாய்ப்பு மற்றும் வருவாய்  போன்றவற்றிற்காக மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் பல ஆயிரம் ஹெக்டேர்  நிலபரப்பை கையகப்படுத்தி அரசு ரப்பர் கழகத்தை ஏற்படுத்தியது. இதன் மூலம்  ஏராளமானோர் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்றனர். அரசு பெரிய  அளவு வருமானமும் ஈட்டி வந்தது. நாட்கள் செல்ல செல்ல அரசியல் தலையீட்டால் ஊழல் நுழைந்து நிர்வாக  சீர்கேடுகளில் சிக்கி சிதைந்து வருகிறது.

தொழிலாளர்களுக்கு பணி வழங்குவது,  ரப்பர் செடி நடவு செய்தல், முதிர் மரங்களை வெட்ட டெண்டர் விடுதல்,  பாதுகாப்புக்கு வேலி அமைத்தல் என எல்லாவற்றிலும் ஊழல், கமிசன்  தலைவிரித்தாடுகிறது. இதனால் பெருமளவு லாபம் சம்பாதித்து வந்த அரசு ரப்பர்  கழகம் தற்போது நஷ்டத்தில் இயங்குவதாக கணக்கு காட்டப்பட்டு தொழிலாளர்களுக்கு  வழங்க வேண்டிய ஊதிய சலுகைகளை மறுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

 அரசு ரப்பர் கழகத்தில் பல ஆண்டுகளாக முதிர் ரப்பர் மரங்களை  டெண்டர் விட்டு முறிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் பல நூறு  கோடிகள் வருவாய் ஈட்டப்படுகிறது. முதிர் மரங்கள் வெட்டப்பட்ட  இடங்களில் புதியதாக ரப்பர் செடி நடவு செய்யப்பட்ட பின் அங்கு வாழை,  அன்னாசி போன்ற ஊடு பயிர் விவசாயத்துக்கு குத்தகைக்கு விடப்படுகிறது.

அரசு  ரப்பர் கழக பகுதிகளில் பெருமளவு பகுதிகள் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி,  சிற்றார் 1, சிற்றார் 2 அணை பகுதிகளையும் வனபகுதிகளையும் சார்ந்துள்ள  இயற்கை வளம், தண்ணீர் வளமிக்க பகுதி என்பதால் ஊடு பயிர் விவசாயம் இயற்கை  சூழலில் செழித்து வளரும். இதனால் அரசு ரப்பர் கழக பகுதிகளில் ஊடு பயிர் செய்வதற்கு போட்டி கடுமையாக இருக்கும்.

 ஆனால் ரப்பர் கழக அதிகாரிகள் தங்களுக்கு வேண்டிய பினாமி ஒப்பந்தகாரர்களை  செட்டப் செய்து ஊடு பயிர் செய்வதற்கான ஏலம் நடத்தாமல் ஏலம் நடத்தியது  போன்று குறைந்த தொகைக்கு ஆவணங்கள் தயார் செய்துள்ளனர்.பின்னர் குறிப்பிட்ட சிலருக்கு  குத்தகை விடுகின்றனர். அவர்கள் பெரும் தொகைக்கு விவசாயிகளுக்கு மறு  குத்தகைக்கு விட்டு லாப தொகையை பங்கீடு செய்கின்றனர். சில நேரங்களில்  விவசாய ஆர்வமுடையவர்கள் களத்தில் இறங்கி குத்தகைக்கான ஏலத்தில் கலந்து  கொள்ளும் போது கட்ட பஞ்சாயத்து எடுபடாமல் பெரும் தொகைக்கும் ஏலம் போய்  ரப்பர் கழத்துக்கு லாபம் கிடைக்கிறது.

அதிகாரிகளால் ஹெக்டேருக்கு ஆயிரம் முதல் ₹ 6 ஆயிரம் வரை தாரைவார்க்கப்பட்ட  பகுதிகளில்  போட்டி ஏலம் நடைபெற்றதில் ₹ 75 ஆயிரம் வரை ஏலம் போய் உள்ளது. இவ்வாறு ஏலம்  நடைபெறும் போது சில நேரங்களில் அதிகாரிகள் மற்றும் அவர்களின் ஆசி பெற்ற  ஒப்பந்தகாரர்கள் போட்டி ஏலத்தில் ஈடுபடுபவர்களை மிரட்டி வெளியேற்றும்  சம்பவங்களும் நடைபெற்றுள்ளது.

 இதேபோன்று  மணலோடை கோட்டத்தில் கூப்பு எண் 22, 23 எ, 23 பி, 23, 25 ஆகிய கூப்புகளில்  ஊடு பயிர் நடவுக்கு கடந்த 21 ம் தேதி பகல் 11 மணிக்கு ஏலம் நடைபெறும் என்று  அறிவிக்கப்பட்டிருந்தது. ஏலத்தில்  2 ஒப்பந்தகாரர்கள் மட்டும்  கலந்து கொண்டனர். கூப்பு எண் 25 யை தவிர மற்றவை கரடுமுரடான மலைசரிவு பகுதி  என்பதால் அவைகளை யாரும் ஏலம் கேட்க வில்லை. சமதளபரப்புடன் சாலை, தண்ணீர்  வசதியுடன் கூடிய 25 ம் எண் கொண்ட கூப்பை மட்டும் இரண்டு பேர் ஏலம்  கேட்டனர்.

அதில் ஒருவருக்கு ஏலம் கிடைத்த நிலையில் ஏலம் நடத்திய அதிகாரி  உயர் அதிகாரிகளின் பார்வைக்கு அனுப்பி ஏலத்தை உறுதி செய்வதாக கூறி  அனுப்பியுள்ளனர். அவர்கள் பகல் ஒரு மணிவரை அங்கு காத்திருந்து விட்டு ஏலம்  தங்களுக்குதான் என நம்பிக்கையுடன் சென்றனர். ஆனால் மறுநாள் சம்மந்தப்பட்ட  அதிகாரி அந்த நபரை அழைத்து அந்த ஏலத்தை மறந்து விடுங்கள். அதற்கு பதிலாக  உங்களுக்கு வேறு இடம் தருகிறேன் என கூறியுள்ளார்.

அரசு விதிமுறைபடி புதியதாக  ரப்பர் செடி நடுவதற்கு முன் அந்த இடத்தை பக்குவபடுத்தி பாதுகாப்பு வேலி  அமைக்க வேண்டும். அதன்பின்னர் ரப்பர் செடிகளை நடவு செய்து செடி செழித்து வளருவதற்கான  வழிமுறைகளை செய்ய வேண்டும். பின்னர்அதற்கு பாதிப்பில்லாமல் ஊடு பயிர் நடுவதற்கு  ஏலம் அல்லது டெண்டர் விட வேண்டும். ஆனால் இங்கு நேர்மாறாக எதுவும் செய்யாமல்  காலி இடத்தில் ஊடு பயிர் நடவு செய்ய போலிதனமாக ஏலம் நடத்தி அரசுக்கு  பெரும் வருவாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளனர்.

இதனால் இத்தகைய ஏல முறைகளை  ரத்து செய்துவிட்டு முறையாக ரப்பர் செடி நடவு செய்தபின் முறைகேடு  நடைபெறாமல் இருக்க புகாரில் சிக்காத அதிகாரிகள் மூலமாகவோ அல்லது அரசு  ரப்பர் கழக நாகர்கோவில் அலுவலகத்தில் வைத்து ஏலம் நடத்த வேண்டும்.  அப்போதுதான் காட்டுக்குள் நடைபெறும் முறைகேடுகள் தவிர்க்க முடியும் என்று  பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் விரும்புகின்றனர்.  

கண்காணிப்பு கேமராஅமைக்க வேண்டும்

இதுகுறித்து அரசு ஒப்பந்தகாரர்கள் சங்க செயற்குழு உறுப்பினர்  யானோஸ் கூறுகையில், எங்கும் இல்லாத அளவு அரசு ரப்பர் கழக அலுவலகங்களில்  முறைகேடுகள் நடைபெறுகிறது. மணலோடை கோட்ட அலுவலகத்தில் இது அதிகமாக உள்ளது.  புதியதாக ரப்பர் செடி நடவு செய்வதற்கு  3 அடி ஆழத்தில் குழி தோண்டி அதில்  வேறு இடத்திலுள்ள மண் மற்றும் சாணியால் நிரப்பி பின்னர் நடவு செய்ய  வேண்டும். தோண்டுவதற்கு எந்திரங்கள் பயன்படுத்த கூடாது. மனித சக்தியை  பயன்படுத்த வேண்டும். ஆனால் எதுவும் செய்வதில்லை சாணியை பெயரளவில் கூட  பயன்படுத்துவதில்லை.

ஒரு செடி நடுவதற்கு எவ்வளவு செலவு என்பது யாருக்கும்  தெரியாது. குறிப்பிட்ட 3 பேர் மட்டும் இந்த வேலையை  செய்து வருகின்றனர்.
 இதற்கு ரகசிய முறையில் டெண்டர் நடத்தி கோடி கணக்கில் பணம்  சுருட்டப்படுகிறது. இதனை அரசு கண்காணித்து நடவடிக்கை எடுப்பதோடு விதி  முறைகளை சரியாக பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

கோட்ட  அலுவலகங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க கண்காணிப்பு கேமராக்களை நிறுவ  வேண்டும். ஏலம் அல்லது டெண்டர் நடைபெறுவதை வீடியோ பதிவு செய்ய வேண்டும்.  வேலை நடைபெறும் பகுதிகளை சிறப்பு ஆய்வு குழுக்கள் மூலம் அவ்வப்போது  ஆய்வுகள் செய்து கண்காணிக்க வேண்டும். கூப்பு எண் 25 ல் ரப்பர் செடி நடவு  செய்யாமல் போலிதனமாக ஊடுபயிர் நடுவதற்கு ஏலம் நடத்தியதை ரத்து செய்ய  வேண்டும். இல்லையென்றால் நீதி மன்றத்தில் முறையிடுவோம் இவ்வாறு அவர்  கூறினார்.

Tags : bidding ,State Rubber Corporation , Kulasekara: The rubber produced in Kumari district is of the highest quality in the world. Thus rubber farming is the pioneer agriculture.
× RELATED சீர்காழி அருகே குளம் ஏலம் எடுப்பதில்...