×

ஆற்காடு அருகே பரபரப்பு பறவைக்காய்ச்சல் பரவுகிறதா செத்து மடிந்த பறவைகள்-கால்நடை மருத்துவர்கள் ஆய்வு

ஆற்காடு : ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட நாராயணபுரத்தில் உள்ள பிள்ளையார் கோயில் மற்றும் அம்மன் கோயில் அருகில் நேற்று முன்தினம் 2 நாய்கள் செத்து கிடந்தன. அதை அப்பகுதி மக்கள் அடக்கம் செய்துள்ளனர்.
இந்நிலையில் அப்பகுதியில் நேற்று கோழி, காகம், மைனா உள்ளிட்ட பறவைகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. தொடர்ந்து மேலும் சில பறவைகள் செத்து மடிந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

தற்போது பல்வேறு பகுதிகளில் பறவைக்காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், பறவைகள் செத்து மடிந்துள்ளன. இதனால் அப்பகுதியில் பறவைக்காய்ச்சல் பரவுவதாக மக்கள் பீதி அடைந்துள்ளனர்.இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன் திமிரி போலீசில் நேற்று புகார் அளித்தார். அதில், ‘நாராயணபுரம் பிள்ளையார் கோயில் மற்றும் அம்மன் கோயில் அருகில் உள்ள நிலத்தை சாம்பசிவபுரத்தைச் சேர்ந்த அறிவழகன் என்பவர் வாங்கி உள்ளார். நிலத்தை வாங்கியது முதலே ஊர் மக்களிடம் சண்டை போட்டு வருகிறார்.

அந்த கோயிலைச் சுற்றி நெல், அரிசியில் விஷம் கலந்து வைத்துள்ளார். இதில் எனது வீட்டை சேர்ந்த 3 கோழிகள் இறந்து விட்டன. காழ்ப்புணர்ச்சி காரணமாக இதனை அறிவழகன்தான் செய்திருப்பார். எனவே தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திமிரி  போலீசார், அறிவழகனை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் தகவலறிந்த அரசு கால்நடை மருத்துவர்கள் திருநாவுக்கரசு, லட்சுமணன் ஆகியோர் நேற்று மாலை அங்கு வந்து இறந்து கிடந்த கோழி, காகம் உள்ளிட்ட பறவைகளை விளாப்பாக்கம்  அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதுகுறித்து கால்நடை மருத்துவர்கள் கூறுகையில், ‘இறந்து கிடந்த பறவைகளின் உடல் பாகங்கள் சென்னையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். உடற்கூறு ஆய்வின் முடிவில்தான் விஷம் கலந்ததால் பறவைகள் இறந்ததா? அல்லது வேறு ஏதாவது தொற்று காரணமா? என்பது தெரியவரும்’ என்றனர்.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Arcot , Arcot: Pillaiyar Temple and Goddess at Narayanapuram in Ranipettai District, Arcot next to Vilapakkam Municipality
× RELATED ராணிப்பேட்டை மாவட்டத்தில் மயானக்கொள்ளை திருவிழா கோலாகலம்