தென்பென்னை ஆற்றில் தடுப்பணை உடைந்த சம்பவம்!: ஸ்டாலின் உத்தரவின் பேரில் ஆய்வு மேற்கொண்ட திமுக எம்.எல்.ஏக்கள்..!!

கடலூர்: தென்பென்னை ஆற்றில் கட்டிமுடிக்கப்பட்ட சில மாதங்களிலேயே தடுப்பணை உடைந்த சம்பவம் தொடர்பாக திமுக எம்.எல்.ஏக்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். கடலூர் மாவட்டம் எனதரிமங்கலம் மற்றும் விழுப்புரம் மாவட்டம் தளவானூர் இடையே தென்பெண்ணை ஆற்றில் கட்டப்பட்ட தடுப்பணையில் ஒருபக்க கதவனை முழுவதுமாக உடைந்தது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் கட்டுப்பாட்டில் இருக்கும் பொதுப்பணியின் கீழ் கட்டப்பட்ட தடுப்பணை 3 மாதங்களிலேயே உடைந்து சிதறிய சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், அங்கு திமுக எம்.எல்.ஏக்களான கணேசன், சபா ராஜேந்திரன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து திட்டக்குடி எம்.எல்.ஏ. கணேசன் தெரிவித்ததாவது, தென்பென்னை ஆற்றில் தடுப்பணை உடைந்து விழுந்ததால் அதிகாரிகள் பயம்கொண்டு உடனடியாக மதகுகளை திறந்துள்ளனர். இதன் காரணமாக 10 அடிக்கு மேல் தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் முழுவதும் வீணாக கடலில் சென்று கலந்துவிட்டது. சுமார் 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து கட்டப்பட்ட தடுப்பணை 3 மாதத்தில் இடிந்து விழுவது அதிமுக அரசின் இழுதன்மையை காட்டுகிறது என குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக சென்னையில் இருந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் தலைமையில் குழு வரவுள்ளதாக தெரிவித்தார். முதலமைச்சர் துறையில் நடைபெறும் ஊழல், அனுபவமற்ற ஒப்பந்ததாரர் பணி ஒதுக்கியது. அதனால் தரமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்ட பணி போன்றவற்றால் மக்கள் வரிப்பணம் சுமார் 25 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளது என்பதற்கு சான்றாக இச்சம்பவம் அமைந்துள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

Related Stories: