×

குடியாத்தம், வாணியம்பாடி, வாலாஜாபேட்டை நகராட்சிகளில் கசடு கழிவு மேலாண்மை திட்டப்பணிகள் தீவிரம்

வேலூர் : வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் குடியாத்தம், வாலாஜாபேட்டை, வாணியம்பாடி நகராட்சிகளில் கசடு கழிவு மேலாண்மை திட்டப்பணிகள் தீவிரமடைந்துள்ளதாக நகராட்சிகளின் மண்டல இணை இயக்குனரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

திறந்தவெளியில் மலம் கழிப்பதை தடுப்பதற்காக ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் கிராம பகுதிகளில் வீடுதோறும் ‘செப்டிக் டேங்க்’ அமைத்து கழிப்பறைகள் கட்டித்தரப்படுகின்றன. இப்படி அதிகரித்து வரும் செப்டிக் டேங்க்களில் சேரும் கழிவுகளை முறையாக மேலாண்மை செய்யும் வகையில் ‘கசடு கழிவுநீர் மேலாண்மை’ என்ற திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது.

அதேபோல், தமிழகத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்துவதில் எதிர்கொள்ளும் சிரமத்தை கருத்தில் கொண்டு, மாற்று ஏற்பாடாக கசடு கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகளில் கசடு கழிவு மேலாண்மை திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

அதன்படி வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சியில் 2 ஏக்கர் பரப்பளவில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவில் சுத்திகரிப்பு தொட்டி, கழிவு உலர் களம், கசடு சேமிப்பு கிடங்கு, காவலர் அறை என அனைத்து கட்டமைப்புகளும் கொண்ட வளாகம் ₹3 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கும் பணிகள் தொடங்கி தற்போது 80 சதவீதம் வரை நிறைவடைந்துள்ளது.

அதேபோல் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் 1 ஏக்கர் பரப்பளவில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கசடு கழிவுநீர் மேலாண்மை வளாகம் ₹3 கோடி மதிப்பீட்டில் அமைக்கும் பணி தொடங்கி தற்போது 40 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் 2.5 ஏக்கர் பரப்பளவில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவில் கசடு கழிவு மேலாண்மை திட்ட வளாகம் ₹3.3 கோடி மதிப்பீட்டில் அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது என்று நகராட்சிகளின் மண்டல இணை இயக்குனரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : municipalities ,Gudiyatham ,Vaniyambadi ,Walajapet , Vellore: Garbage in Gudiyatham, Walajapet and Vaniyambadi municipalities in Vellore, Ranipettai and Tirupati districts.
× RELATED பொதட்டூர்பேட்டை, பள்ளிப்பட்டு பேரூராட்சியில் தண்ணீர் பந்தல் திறப்பு