குப்பையை தரம் பிரிக்காமல் குடியிருப்பு பகுதியில் கொட்டி எரிப்பதால் சுகாதார கேடு-பொதுமக்கள் அவதி

அறந்தாங்கி : அறந்தாங்கி அருகே நாகுடி ஊராட்சியில் குப்பையை தரம் பிரிக்காமல் குடியிருப்பு பகுதியில் கொட்டி எரிப்பதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் பெரிய ஊராட்சிகளில் ஒன்றாகவும், பெரிய கடைவீதி உள்ள ஊராட்களில் ஒன்றாகவும் நாகுடி ஊராட்சி விளங்குகிறது. நாகுடி கடைவீதியில் சேகரமாகும் குப்பைகளை ஊராட்சி நிர்வாகம் சேகரித்து, மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து அதை அழித்து வந்தது.

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் சுகாதாரம் கெடாத வகையில் குப்பைகளை ஊராட்சி நிர்வாகம் மேலாண்மை செய்து வந்தது. ஆனால் தற்போது நாகுடி கடைவீதி மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை நாகுடி ஊராட்சி நிர்வாகம் தரம் பிரிக்காமல் குடியிருப்பு பகுதிகளில் சாலை ஓரம் கொட்டுகிறது. மேலும் இவ்வாறு கொட்டும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்காமல்(உடலுக்கு தீங்குவிளைவிக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் உள்பட) ஊராட்சி நிர்வாகம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு எதிராக குப்பைகளை தீ வைத்து எரித்து வருகின்றனர்.

இவ்வாறு குப்பையுடன் பிளாஸ்டிக் கழிவுகளையும் எரிக்கும்போது வெளிப்படும் புகையால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதோடு, தொடர்ந்து சுவாசிப்பவர்களுக்கு இதயக்கோளாறு, மூளைப்புற்றுநோய் வரும் ஆபத்தும் உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியது:

நாகுடி ஊராட்சியில் சேகரமாகும் குப்பைகளை சாலை ஓரம் கொட்டி பிளாஸ்டிக் கழிவுகளுடன் சேர்த்து எரிப்பதால், அவ்வழியே செல்வோர், அருகே உள்ள குடியிருப்புகளில் வசிப்பவர்கள், எரிக்கப்படும் குப்பையில் இருந்து வெளிப்படும் புகையை சுவாசிக்கும் நிலை ஏற்படுகிறது. இவ்வாறு பிளாஸ்டிக் கழிவுகளை எரிக்கும் குப்பைகளால் சுகாதாரக் கேடு ஏற்படுவதோடு குடியிருப்புகளில் வசிப்போர் நோய் பாதிப்பிற்கு உள்ளாகும் நிலையும் உள்ளது. மேலும் சாலை ஓரம் கொட்டப்படும் குப்பையால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய்களையும் பரப்பி வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

எனவே நாகுடி ஊராட்சியில் சேகரமாகும் குப்பையை மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கொட்டி மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து குப்பையை முறையாக மேலாண்மை செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories:

More
>