பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு பணி விரைவில் தொடங்கும் -பல்கலைக்கழக பதிவாளர் தகவல்

புதுக்கோட்டை : தமிழ்நாட்டின் சங்ககாலக் கோட்டைக்கான அடையாளமாக கருதப்படும் புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் தமிழ்நாடு திறந்த நிலைப்பல்கலைக்கழகத்தின் அகழாய்வு பணி விரைவில் தொடங்கும் என பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ரத்தினகுமார் அறிவித்துள்ளார்.

புதுக்கோட்டை நகரில் இருந்து சுமார் 9 கிமீ தொலைவிலுள்ள பொற்பனைக்கோட்டை என்ற பகுதியில் சங்ககால கோட்டை இருந்ததற்கான அடையாளங்கள் இன்னமும் காணப்படுகின்றன. சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் வட்ட வடிவில் சுமார் 1.6 கிமீ சுற்றளவில் இந்த அடையாளங்கள் காணக்கிடைக்கின்றன.

அருகேயே உருக்கு ஆலை செயல்பட்டதற்கான அடையாளங்களும் உள்ளன. இந்நிலையில், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் இப்பகுதியில் நடுகல் ஒன்றை கண்டெடுத்து ஆய்வு செய்து அதற்கான முடிவுகளை 2013 ஆவணம் இதழில் பதிவு செய்துள்ளார்.

புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தினரும் தொடர் ஆய்வுகளை இப்பகுதியில் மேற்கொண்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழக வரலாறு மற்றும் சுற்றுலாவியல் பள்ளியின் தொல்லியல் துறை சார்பில் இப்பகுதியில் அகழாய்வு செய்யத் திட்டமிடப்பட்டு, ஆரம்ப நிலை ஆய்வுகள் நடத்தப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக தமிழகத் தொல்லியல் துறையின் பரிந்துரையுடன் மத்திய தொல்லியல் ஆய்வுத் துறை தற்போது இவர்களின் அகழாய்வு விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டு அனுமதி அளித்துள்ளது.இதுகுறித்து பல்கலைக்கழக பதிவாளர் ரத்தினகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பொற்பனைக் கோட்டை குறித்து ஏற்கனவே ஆய்வு செய்திருந்த நிலையில், மேலதிக ஆய்வை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் இனியன் மேற்கொண்டு கடந்த 2020ல் ஆய்வறிக்கையை அளித்துள்ளார்.இதன்படி, தமிழ்நாட்டில் சங்ககாலக் கோட்டை இருந்ததற்கான அடையாளமாக இங்குள்ள கோட்டை, கொத்தளத்திலுள்ள “ப’ வடிவக் கட்டுமானம், 15 அடி ஆழம், 40 அடி அகலத்தைக் கொண்ட அகழியும் உள்ளன.

இங்கு அகழாய்வு செய்வதற்கான அனுமதி மத்திய தொல்லியத் துறையில் இருந்து கிடைத்துள்ள நிலையில், அகழாய்வுப் பணி விரைவில் தொடங்கும். தமிழ்நாடு திறந்த நிலைப்பல்கலைக்கழகத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும். இந்த ஆய்வு, தமிழக வரலாற்றாய்வில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் அய்யமில்லை. இந்த அகழாய்வுப் பணிக்கு பேராசிரியர் இனியன் இயக்குநராக செயல்படுவார். இவ்வாறு அதில் கூறுப்பட்டுள்ளது.

Related Stories:

>