இலங்கை முன்னிலை பெற வாய்ப்பு: எம்புல்டெனியா அபார பந்துவீச்சு

காலே: இங்கிலாந்து அணியுடனான 2வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இலங்கை அணி முன்னிலை பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. காலே சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 381 ரன் குவித்தது. மேத்யூஸ் 110, டிக்வெல்லா 92, தில்ருவன் 67, சண்டிமால் 52, திரிமன்னே 43 ரன் விளாசினர். இங்கிலாந்து பந்துவீச்சில் ஆண்டர்சன் 6 விக்கெட், மார்க் வுட் 3, சாம் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 2ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 98 ரன் எடுத்திருந்தது. பேர்ஸ்டோ 24, கேப்டன் ரூட் 67 ரன்னுடன் நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர்.

பேர்ஸ்டோ 28 ரன் எடுத்து வெளியேற, லாரன்ஸ் 3 ரன்னில் அவுட்டானார். ரூட் - பட்லர் இணைந்து 5வது விக்கெட்டுக்கு 97 ரன் சேர்த்தனர். ரூட் சதத்தை நிறைவு செய்ய, மறுமுனையில் பட்லர் அரை சதம் அடித்தார். அவர் 55 ரன் (95 பந்து, 7 பவுண்டரி) எடுத்து ரமேஷ் மெண்டிஸ் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த சாம் கரன் 13, டொமினிக் பெஸ் 32, மார்க் வுட் 1 ரன் எடுத்து எம்புல்டெனியா சுழலில் மூழ்கினர். இரட்டை சதத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த ஜோ ரூட் 186 ரன் (309 பந்து, 18 பவுண்டரி) விளாசி துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானார். அத்துடன் 3ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஜாக் லீச் (0) களத்தில் உள்ளார். இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 339 ரன் எடுத்துள்ளது. எம்புல்டெனியா 41 ஓவரில் 6 மெய்டன் உள்பட 132 ரன் விட்டுக்கொடுத்து 7 விக்கெட் கைப்பற்றினார். இங்கிலாந்து அணி இன்னும் 42 ரன் பின்தங்கியுள்ள நிலையில் இன்று 4ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

Related Stories:

>