மழை நீரை சேமிக்க 7 தடுப்பணை, 15 ஏரிகள் புனரமைப்பு பணிக்கு ரூ.434 கோடி நிதி தர உலக வங்கி சம்மதம்: புதிய குடிநீர் திட்டப்பணிகளுக்கு ரூ.600 கோடி கேட்கும் சென்னை குடிநீர் வாரியம்

சென்னை: வடகிழக்கு பருவமழை மூலம் கிடைக்கும் நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க ரூ.434 கோடி மதிப்பில் புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்துவதற்கு நிதி தர உலக வங்கி சம்மதம் தெரிவித்துள்ளது. மேலும், புதிய குடிநீர் திட்டபணிகளுக்கு ரூ.600 கோடி சென்ைன குடிநீர் வாரியம் கேட்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மூலம் கிடைக்கும் மழை நீரை சேமித்து வைக்க போதிய கட்டமைப்பு இல்லாததால் ஒவ்வொரு ஆண்டும் பல நூறு டிஎம்சி நீர் வீணாக கடலில் கலக்கிறது.

குறிப்பாக, சென்னையில் மழை நீர் சேமித்து வைக்கப்படாததால் சராசரியாக 20 டிஎம்சி வரை வீணாக கடலில் கலக்கும் நிலை தான் உள்ளது. இதனால், கோடை காலங்களில் சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் பல்வேறு சிக்கல்கள் எழுகிறது. இந்த நிலையில் மழை நீரை சேமித்து  வைக்க பொதுப்பணித்துறை புதிய திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ரூ.434 கோடியில் 15 ஏரிகள், 7 இடங்களில் தடுப்பணை அமைத்து அதில் மழை நீரை சேமித்து வைக்கப்படுகிறது. இதற்காக, பொதுப்பணித்துறை சார்பில திட்ட அறிக்கை தயார் செய்து அரசின் ஒப்புதல் பெறப்பட்டது.

தொடர்ந்து இந்த திட்டத்தை உலக வங்கி நிதியின் மூலம் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில், உலக வங்கிக்கு தமிழக அரசு சார்பில் அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. இந்த அறிக்கை தொடர்பாக உலக வங்கி குழுவினர் கடந்த பொதுப்பணித்துறை மற்றும் குடிநீர் வாரிய பொறியாளர்களுடன் கடந்த 21ம் தேதி ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் பேரில், முதற்கட்டமாக மழை நீரை சேமித்து வைக்கும் புதிய திட்டத்துக்கு ரூ.434 கோடி தர சம்மதம் தெரிவித்து இருப்பதாக தெரிகிறது.

அதே போன்று சென்னை குடிநீர் வாரியம் சார்பிலும் ரூ.600 கோடி மதிப்பிலான புதிய குடிநீர் திட்டங்களையும் செயல்படுத்தவிருக்கிறது. அதன்படி,ஏரிகளை இணைத்து புதிய நீர் தேக்கம் அமைப்பது, 40 ஏரிகளில் இருந்து குடிநீருக்கு பைப் லைன் மூலம் தண்ணீர் கொண்டு வருவது உட்பட புதிய குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இது தொடர்பாக உலக வங்கி குழுவினருடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் அன்றைய தினம் நடந்தது. இக்கூட்டத்தில் புதிய குடிநீர் திட்டங்களை செயல்படுத்துவது எப்படி என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, நிதித்துறை அதிகாரிகளுடன் உலக வங்கி குழுவினர் ஆலோசனை நடத்த வருகின்றனர். அதன்பிறகு இப்பணிகளுக்கு நிதி தருவது செய்வது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகள் முடிவு செய்வார்கள் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories:

>