தென்பெண்ணை ஆற்றில் ரூ.25.35 கோடியில் கட்டிய தடுப்பணை ஒரே மாதத்தில் உடைந்தது: பொதுமக்கள், விவசாயிகளுடன் திமுகவினர் போராட்டம்

விழுப்புரம்: விழுப்புரம்- கடலூர் மாவட்டம் இடைய தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, ரூ. 25.35 கோடியில் கட்டப்பட்ட தடுப்பணை ஒரே மாதத்தில் உடைந்தது. தரமற்ற பணிகளால் தடுப்பணை உடைந்ததாக கூறி விவசாயிகள், பொதுமக்களுடன் திமுகவினர் ஆற்றங்கரையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் தளவானூர், கடலூர் மாவட்டம் எனதிரிமங்கலம் இடையே ரூ.25.35 கோடியில் தடுப்பணை கட்டும் பணி அடிக்கல் நாட்டு விழா கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றது. கட்டுமானப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 20ம் தேதி தளவானூர் தென்பெண்ணை ஆற்றில் நடைபெற்ற விழாவில் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் பங்கேற்று தடுப்பணையை திறந்து வைத்தார். இந்த தடுப்பணை 400 மீட்டர் நீளமும் 3.1 மீட்டர் உயரமும் கொண்டது.

இந்நிலையில் தடுப்பணை திறக்கப்பட்டு 1 மாதமே ஆன நிலையில் அதன் கரைப் பகுதி நேற்றுமுன்தினம் திடீரென உடைந்தது. அணைக்கட்டில் இருந்து தண்ணீர் வெள்ளம் போல் கரை புரண்டு ஓடியது. இதில் ஒரு மதகும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. இந்த தகவல் பரவியதும் விவசாயிகளும் பொதுமக்களும் அணையில் குவிந்தனர். அணைக்கட்டின் கரைப் பகுதியில் உடைப்பு ஏற்பட்டு அணை நீர் வெளியேறுவதை தடுக்க பாறைகளைக் கொண்டு அதனை அடைக்கும் முயற்சி நடந்தது. இந்த நிலையில், தடுப்பணை உடைப்பை, அதிகாரிகள் பார்வையிட, வராததை கண்டித்து திமுக எம்எல்ஏக்கள் பொன்முடி, சபா ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் தென்பெண்ணையாற்றில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலை 8 மணிக்கு தொடங்கிய காத்திருப்புப் போராட்டம் பிற்பகல் 12 மணி வரை நீடித்தது. இந்தநிலையில் நான்கு மணி நேரத்திற்கு பிறகு, கடலூர் துணை ஆட்சியர் ஜெகதீஸ்வரன், கூடுதல் எஸ்பி பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது மாலை நான்கு மணியளவில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் வருவார்கள் என்றும், சேதமடைந்த பகுதிகள் விரைந்து சரி செய்யப்படும் என்றும் உறுதி அளித்த பிறகு போராட்டத்தை கைவிட்டு சென்றனர். இதற்கிடையே, விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் சண்முகம் கூறியதாவது, இந்த அணை உடையவில்லை. சேதமடைந்த தடுப்பு சுவர் கட்ட ரூ.7 கோடி மதிப்பீடு செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் சேதமடைந்த தடுப்புசுவர் கட்டப்படும் என்றார்.

* மண்ணைக் கொட்டி மூடி மறைத்த அதிகாரிகள்

போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பிறகு சென்றவுடனேயே, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மதகு இருந்த இடம் தெரியாமல், மண்ணைக் கொட்டி மூடி மறைத்தனர். தற்போது மூன்று மதகுகளில், இரண்டு மதகுகள் மட்டுமே உள்ளன. உடைந்த இடமே தெரியாமல் அதிகாரிகள் மூடி மறைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: