×

குடியரசு தினமான நாளை விவசாயிகள் பிரமாண்ட பேரணி 2 லட்சம் டிராக்டர்கள் டெல்லிக்கு படையெடுப்பு: 100 கி.மீ. தூரத்துக்கு ஊர்வலம்; பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

புதுடெல்லி: புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, குடியரசு தினமான நாளை, டெல்லியில் 2 லட்சம் டிராக்டர்கள் பங்கேற்கும் பிரமாண்ட பேரணியை விவசாயிகள் நடத்துகின்றனர். இதற்காக, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து டெல்லியை நோக்கி டிராக்டர்கள் படையெடுத்து வருகின்றன. 100 கிமீ தூரம் நடத்தப்படும் இந்த பேரணிக்காக, போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, டெல்லி எல்லையில் நேற்றும் 60வது நாளாக விவசாயிகள் முற்றுகை போராட்டத்தை தொடர்ந்தனர்.

இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக, விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு நடத்திய 11 கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துள்ளன. இச்சட்டத்தை ஒன்றரை ஆண்டுகளுக்கு நிறுத்தி வைப்பதாகவும், மத்திய அரசு - விவசாய சங்க பிரதிநிதிகள் அடங்கிய கூட்டுக்குழுவை அமைத்து, இச்சட்டங்கள் தொடர்பான பிரச்னைகளை தீர்க்கலாம் என்றும் மத்திய அரசு யோசனை கூறியது. இதை நேற்று முன்தினம் நிராகரித்த விவசாய சங்கங்கள், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஏற்கனவே அறிவித்தப்படி குடியரசு தினமான நாளை பிரமாண்ட டிராக்டர் பேரணி நடத்தப்படும் என அறிவித்துள்ளனர். குடியரசு தினத்தில் சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்த பேரணியை அவர்கள் நடத்துகின்றனர்.

டெல்லிக்குள் இந்த பேரணியை நடத்த போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். எனவே, டெல்லி வெளிவட்டச் சாலையில் சிங்கு, காஜிபூர், திக்ரி, பல்வால் மற்றும் ஷாஜகான்பூர் எல்லைகளில் இருந்து விவசாயிகள் இந்த பேரணியை நடத்துகின்றனர். பேரணியை அமைதியாக நடத்துவதாக விவசாய சங்கங்கள் அளித்த வாக்குறுதியை ஏற்று, இந்த அனுமதி வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பேரணியை நடத்துவதற்கான ஏற்பாடுகளை விவசாய சங்கங்கள் முழுவீச்சில் செய்து வருகின்றன.

பேரணியில் பங்கேற்பதற்காக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து டெல்லியை நோக்கி டிராக்டர்களுடன் விவசாயிகள் படையெடுத்து வருகின்றனர். நாளைய பேரணியில் 2 லட்சம் டிராக்டர்கள் பங்கேற்கும் என்று விவசாய சங்க பிரதிநிதிகள் கூறியுள்ளனர். குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லி ராஜபாதையில் ராணுவ அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் நிலையில், டெல்லிக்கு வெளியே விவசாயிகள் இந்த பேரணியை நடத்துவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பேரணியை முன்னிட்டு அசம்பாவிதங்கள் நடப்பதை தடுக்க, போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

போராட்ட ஏற்பாடுகள் குறித்து சம்யுக்தா கிசான் மோர்ச்சா விவசாய சங்க பிரதிநிதிகள் நேற்று கூறிய விவரம் வருமாறு:
* விவசாயிகளின் போராட்டத்தையும், விவசாய தொழில்நுட்பங்களையும் விளக்கும் அலங்கார வாகனங்களும் பேரணியில் இடம் பெறும்.
* அனைத்து டிராக்டர்களிலும் தேசியக்கொடி பறக்கும்.
* விவசாயிகள் ஏற்கனவே போராட்டம் நடத்தி வரும் சிங்கு, திக்ரி, காஜிபூர், பல்வால் மற்றும் ஷாஜகான்பூர் எல்லைகளில் இருந்து பேரணி புறப்படும்.
* மாலை 6 மணி வரையில், 100 கிமீ தூரத்துக்கு பேரணி நடத்தப்படும்.
* டெல்லியில் குடியரசு தின நிகழ்ச்சிகள் முடிந்ததும், பேரணி தொடங்கப்படும்.
* பேரணி செல்லும் சாலைகளில் 40 இடங்களில் ஆம்புலன்சுகள் நிறுத்தப்படும்.
* ஒரு டிராக்டரில் 5 பேர் மட்டுமே அமர்வதற்கு அனுமதி அளிக்கப்படும்.
* பேரணி முடிந்ததும், புறப்பட்ட இடத்துக்கே அனைத்து டிராக்டர்களும் திரும்பி வரும்.
* பேரணி மிகவும் அமைதியாக நடைபெறும். குடியரசு தின விழா நிகழ்ச்சிக்கு எந்த வகையிலும் இடையூறாக இருக்காது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

* மோடி தாயாருக்கு கடிதம்
பஞ்சாப் மாநிலம், பெரோஷ்பூர் மாவட்டம், கொலு கா மோத் என்ற கிராமத்தை சேர்ந்த ஹர்பிரித் சிங் என்பவரும், டெல்லி போராட்டத்தில் பங்கேற்று வருகிறார். அவர் பிரதமர் மோடியின் தாயாரான 100 வயது ஹீராபென் மோடிக்கு எழுதியுள்ள உருக்கமான கடிதத்தில், ‘மிகவும் கனத்த இதயத்துடன் இந்த கடிதத்தை தங்களுக்கு எழுதுகிறேன். தங்களின் மகன் கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், நாட்டில் மிகப்பெரிய போராட்டம் வெடித்துள்ளது. அவருடைய தாயார் என்ற முறையில் தங்கள் மகனிடம் இவற்றை எடுத்துக் கூறி, சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய அறிவுரை கூறுங்கள்,’ என்று கூறியுள்ளார்.

* 300 போலி டிவிட்டர் கணக்கு
டெல்லி காவல்துறை உளவுப் பிரிவு சிறப்பு ஆணையர் தீபேந்திர பதக் நேற்று கூறுகையில், ‘‘நாளை விவசாயிகள் நடத்த இருக்கும் டிராக்டர் பேரணியில் குழப்பம் விளைவிக்க பாகிஸ்தான் சதி செய்துள்ளது. இதற்காக, ஜனவரி 13ம் தேதி முதல் 18 தேதிக்குள் 300 போலி டிவிட்டர் கணக்குகளை தொடங்கி இருக்கிறது. இவற்றின் மூலம் தவறான தகவல்கள் பரப்பி, பேரணியில் குழப்பம் விளைவிக்க முயற்சி செய்கிறது,’’ என்றார்.

* காங். எம்பி மீது தாக்குதல்
டெல்லி சிங்கு எல்லையில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, பஞ்சாப் மாநிலம், லூதியானா தொகுதி காங்கிரஸ் எம்பி ரவ்னீத் சிங் பிட்டு நேற்று கலந்து கொண்டார். பின்னர், வேறொரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற அவர் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். இது பற்றி பிட்டு கூறுகையில், ‘‘தாக்குதல் நடத்தியவர்கள் எனது டர்பன் பிடித்து இழுத்தனர். என்னை தாக்கினர். எனது வாகனமும் சேதப்படுத்தப்பட்டது. இது கொலைவெறி தாக்குதலாக இருந்தது,’’ என்றார்.

Tags : Delhi ,Republic Day , 2 lakh tractors invade Delhi on Republic Day: 100 km Procession to the distance; Heavy security arrangements
× RELATED ஈடி, சிபிஐ நடவடிக்கை குறித்த...