×

தூத்துக்குடி மையவாடியில் தேங்கி நிற்கும் மழைநீர்: உடல்களை அடக்கம் செய்ய முடியாமல் தவிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மையவாடியில் மழைநீர் குளம் போல தேங்கி கிடப்பதால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியாததுடன், புதைக்கப்பட்ட உடல்களின் அழுகிய பாகங்கள் நீரில் மிதந்து துர்நாற்றம் வீசி வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மாநகரில் அனைத்து சமுதாய மற்றும் மதங்களையும் சேர்ந்தவர்களும் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய தூத்துக்குடி-பாளையங்கோட்டை ரோட்டில் பொது மையவாடி அமைக்கப்பட்டுள்ளது. இதனருகே  நவீன எரியூட்டும் மையமும், அந்தந்த சமுதாயத்தினர், மதத்தினரும் உடல்களை விறகுகள் கொண்டு எரிப்பதற்கான மையங்களும் உள்ளது. அதோடு சிலர் தங்களது குடும்பத்தினரின் நினைவாக கல்லறைகளையும் கட்டியுள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடியில் கடந்த 3மாதமாக பெய்த பருவமழையால் மையவாடியில் அதிகளவில் தண்ணீர் தேங்கி நின்றது. தண்ணீர் தேங்காத இடத்தில் சிலர் இறந்தவர்களை அடக்கம் செய்தனர்.

அதேநேரத்தில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களும் இங்கு புதைக்கப்பட்டது. இதற்கிடையே கடந்த வாரத்தில் மாவட்டத்தில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. பருவம் தவறிய தொடர் மழையால் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் பொது மையவாடி முழுவதும் தண்ணீர் செல்ல வழியின்றி குளம் போல் தேங்கி கல்லறை இருக்கும் இடம் எதுவும் தெரியாத நிலை உள்ளது. இதனால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்திடவும், சடங்குகளை செய்யவும் முடியாமல் குடும்பத்தினர் பரிதவித்து வருகின்றனர். கொரோனாவில் இறந்தவர்களின் உடல்கள் சரியான ஆழத்தில் முறையாக அடக்கம் செய்யப்படவில்லை. உடல்களை அடக்கம் செய்யும்போது தமக்கு நோய் தொற்று எதுவும் ஏற்பட்டு விடுமோ? என்ற அச்சத்தில் சரியான முறையில் அப்பணியில் ஈடுபட்டவர்கள் சென்றுள்ளனர். இவ்வாறு பெயரளவிற்கு புதைக்கப்பட்ட உடல்கள் தற்போது தேங்கி கிடக்கும் மழைநீரில் நனைந்து வெளியே வந்து மிதப்பதுடன், உடல்களின் அழுகிய தசைகள் ஆங்காங்கே தண்ணீரில் மிதக்கிறது.

அவற்றில் இருந்து புழுக்கள் உருவாகியுள்ளன. இதனால், அப்பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது. இவற்றால் மிகப்பெரிய நோய் ஏற்படுமோ? என்ற அச்சமும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மையவாடியை சுற்றி குடியிருப்புகள், ஆயுதப்படை காவலர் பயிற்சி மையம், மத வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் நிறைந்துள்ளன. இதற்கிடையே தூத்துக்குடியில் சுமார் ரூ.ஆயிரம் கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது. இத்திட்டத்தில் மையவாடி அருகே பொழுதுபோக்கு பூங்கா நவீனமயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், பாழ்பட்டு கிடக்கும் மையவாடியை சீரமைத்திட எந்தவிதமான திட்டமும் செய்யப்படவில்லை. இந்நிலையில், பொது மையவாடி பகுதியில் நிலவும் சுகாதார சீர்கேட்டை முற்றிலுமாக தடுத்திடவும், இறந்தவர்களின் உடல்களை சரியாக அடக்கம் செய்திட ஏதுவாக மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவேண்டும் என்று மாநகர மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : center ,Thoothukudi , Stagnant rainwater in Thoothukudi center: Suffering from not being able to bury bodies
× RELATED தூத்துக்குடி மக்களவை தொகுதி வாக்கு...