×

காளைகள் எண்ணிக்கை குறைகிறது..! இனம் அழியாமல் தடுக்கும் ஜல்லிக்கட்டு

தமிழகத்தில் ஆண்டுேதாறும் காளைகளின் எண்ணிக்கை 50 ஆயிரம் குறைந்து வருவதாக தெரியவந்துள்ளது. தமிழகத்தில் விவசாய பணிகளுக்கு காளைகள் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வந்தன. ஏர் உழவு, பரப்பு அடித்தல், கிணற்று நீர் இறைப்பு, வண்டி இழுத்தல் உள்ளிட்ட விவசாயத்தின் முக்கியமான பணிகளுக்கு காளைகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தன. விவசாயிகளின் வாழ்வில் காளைகள் முக்கிய அம்சமாக இருந்தன. காலப்போக்கில் விவசாயத்தில் உழவு முதல் அறுவடை வரை அனைத்து பணிகளுக்கும் இயந்திரங்களின் பயன்பாடு அதிகமாகி விட்டது. உழவு பணிக்காக அரிதாகவே காளைகள் பயன்படுத்தப்படுகின்றன. எந்த வேலையும் இல்லாததால் காளைகள் ஒதுக்கப்பட்ட இனமாக மாறிவிட்டன. மாநில அளவில் 1.40 கோடி பசுக்களும், 5 லட்சம் காளைகளும் இருக்கின்றன. பசுக்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை அதிகரித்து வருகிறது.

அதே நேரத்தில், காளைகளின் எண்ணிக்கை 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை குறைந்து வருகிறது. மாடுகளுடன் ஒப்பிடும்போது காளைகளின் எண்ணிக்கை 5 சதவீதம்கூட இல்லாமல் போய்விட்டது. ஆயுசு முடியும் நிலையில் உள்ள காளைகள் அடிமாடாக இறைச்சி கடைகளுக்கு விற்பனை அனுப்புவது அதிகமாக நடக்கிறது. சில உள்ளாட்சி அமைப்புகளில் காளை மாடுகள் குப்பை வண்டி இழுக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. அழிந்து வரும் பாரம்பரிய காளைகளை காக்க, கால்நடை பராமரிப்பு துறையினரும், கால்நடை பல்கலைக்கழகத்தினரும் இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மாறாக பால் உற்பத்தியை மட்டுமே பிரதானமாக கொண்டு கலப்பின பசுக்களை உருவாக்கும் முயற்சி தீவிரமாக நடக்கிறது. தற்போது மாநில அளவில் ஜெர்சி, ஹோல்ஸ்டீன், பிரிசியன், ஜெர்சி கலப்பினம், ஹோல்ஸ்டீன் கலப்பினம், சிந்தி, காங்கேயம், உம்ளாச்சேரி, பர்கூர், புலியகுளம் காளைகள் இருக்கின்றன. இதில் 150 காளைகளை இனவிருத்திக்காக கால்நடை பராமரிப்பு துறையினர் வளர்த்து வருகின்றனர்.

வீரிய ரக காளைகளில் இருந்து கடந்த ஆண்டில் 60.10 லட்சம் உறைவிந்து உற்பத்தி செய்யப்பட்டது. நடப்பாண்டில் 58.82 லட்சம் உறை விந்து உற்பத்தி செய்ய இலக்கு வைக்கப்பட்டுள்ளது. உறை விந்து குப்பிகள் திரவ நைட்ரஜன் மூலமாக கோவை, ஈரோடு, சேலம் உட்பட 20 இடங்களில் சேமிக்கப்பட்டு வருகிறது. உறை விந்து உற்பத்தியை அதிகரிக்க 6 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. மாநில அளவில் 3,429 செயற்கை முறை கருவூட்டல் நிலையங்கள் இருக்கிறது. இங்கே உறைவிந்து மூலமாக சினை உருவாக்கும் பணி தீவிரமாக நடத்தப்படுகிறது. நடப்பாண்டில் சுமார் 10 லட்சம் பசுமாடுகளை உருவாக்க முயற்சி நடக்கிறது. தமிழக கால்நடை பராமரிப்பு துறையினர் கூறுகையில், ‘‘மாடுகளுடன் காளைகளை இணை சேர விடும் காலம் பல ஆண்டிற்கு முன் முடிந்து போய் விட்டது. தொற்று நோய் பரவலை தடுக்கவும், வீரிய ரக கன்றுகளை பெறவும் சினை ஊசி திட்டம் பரவலாக பயன்பாட்டில் இருக்கிறது. காளை கன்று கேட்பவர்கள் அரிதாக இருக்கிறார்கள். பசு மாடுகள் மூலமாக வருவாய் கிடைக்கிறது. காளைகள் உழவு பணிக்கு மட்டுமே உதவுகிறது.

எனவே விவசாயிகள் காளைகளை தவிர்த்து வருகிறார்கள். பால் உற்பத்தியை அதிகரிக்க பசுக்களின் தேவை மிக அதிகமாக இருக்கிறது’’ என்றனர். ஜல்லிக்கட்டிற்கு மட்டும் காங்கேயம் காளைகள் கம்பீரத்தின் அடையாளமாக மதிக்கப்படுகிறது. காட்டெருமையை கூட வீழ்த்தும் திறன் உள்ளதாக காங்கேயம் காளைகளின் வீரத்தை போற்றுகிறார்கள். இந்த காளைகள் மாநில அளவில் சில ஆயிரம் மட்டுமே இருப்பதாக தெரிகிறது. முரட்டு திமிலுடன் வலம் வரும் இந்த காளைகளை பராமரிப்பது சவாலானது. தரமான உணவு இருந்தால் மட்டுமே இந்த காளைகளை நன்றாக வளர்க்க முடியும். சீறி பாய்வதில் வல்லமை கொண்ட காங்கேயம் காளைகள் ஜல்லிக்கட்டுகளிலும், ரேக்ளா ரேஸ்களிலும் பயன்படுத்தப்படுகிறது. ஜல்லிக்கட்டு, ரேக்ளா இல்லாவிட்டால் காளைகள் தமிழகத்தில் அரிதான இனமாக மாறி விடும் அவலம் இருக்கிறது.

Tags : race ,extinction , The number of bulls is decreasing ..! Jallikkattu to prevent the extinction of the race
× RELATED மாட்டு வண்டி எல்கை பந்தயம்