×

என் மகனை வரவேற்க இவ்வளவு பேர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை: நடராஜனின் தந்தை தங்கராஜ் நெகிழ்ச்சி

சேலம்: என் மகனை வரவேற்க இவ்வளவு பேர் திரள்வார்கள் என்பதை எதிர்பார்க்கவில்லை என்று கிரிக்கெட் வீரர் நடராஜனின் தந்தை தங்கராஜ் தெரிவித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் இந்திய அணியில் இடம் பெற்று சிறப்பாக பந்துவீசி தனது அபார திறனை வெளிப்படுத்தினார் தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன். இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரை முடித்துக்கொண்டு நேற்றுமுன்தினம் பெங்களூரு வந்தடைந்தார்.

அங்கிருந்து உறவினர்கள் அவரை சொந்த ஊரான சேலம் சின்னப்பம்பட்டிக்கு அழைத்து வந்தனர். நடராஜன் வருகையையொட்டி அவரை வரவேற்பதற்காக நண்பர்கள், உறவினர்கள் சிறப்பான  ஏற்பாடுகளை செய்து இருந்தனர். சின்னப்பம்பட்டிக்கு வந்த நடராஜனுக்கு ஊர் மக்கள், கிரிக்கெட் ரசிகர்கள், இளைஞர்கள், பெண்கள் என பல்வேறு தரப்பினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். ரசிகர்கள், இளைஞர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். ஊர் நுழைவு வாயிலில் இருந்து நடராஜன் படித்த பள்ளி வரை சாரட் வண்டியில் அழைத்து செல்லப்பட்டார். வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இது குறித்து நடராஜனின் தந்தை தங்கராஜ் கூறியதாவது: நடராஜனின் சகோதரி வீட்டுக்காரர் பெங்களூரிலிருந்து நடராஜனை அழைத்து வந்தார். நடராஜனின் நண்பர்கள் சின்னப்பம்பட்டியிலிருந்து வீடுவரை வரவேற்பு வழங்கினர். வரவேற்புக்கு பின்பு சின்னப்பம்பட்டி பள்ளி அருகில் உள்ள எங்களது இடத்தில் சின்னமேடையில் வரவேற்பை ஏற்றுக்கொண்டு நடராஜன் பேசும் வகையில் ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால் நடராஜன் வெளிநாட்டிலிருந்து விமானம் மூலம் பயணித்து வந்ததால் கொரோனா அச்சம் காரணமாக பொதுவெளியில் அதிகம் கூட்டம் சேர்க்கக்கூடாது. மேடை வேண்டாம் என்று சொன்னதால் மேடையை எடுத்துவிட்டோம். நடராஜனை வரவேற்க இவ்வளவு பேர் திரண்டு வந்திருந்தது எங்களுக்கே ஆச்சர்யமாக இருந்தது.இவ்வாறு தங்கராஜ் கூறினார்.

Tags : Natarajan , I did not expect so many people to gather to welcome my son: Natarajan's father Thangaraj Flexibility
× RELATED சேலத்தில் 22 ஆண்டுக்கு முன் நடந்த கொடூர...