×

மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கையால் பாய்லர், விமான உதிரிபாகம் தயாரிக்கும் கம்பெனிகள் மூடல்: 10 ஆயிரம் பேர் வேலையிழப்பு

புதுக்கோட்டை: மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கையால் பெல் ஒப்பந்தம் வழங்காததால் திருச்சி- புதுக்கோட்டை சாலையில் இயங்கி வந்த நூற்றுக்கும் மேற்பட்ட பாய்லர் , விமான உதிரிபாகம் தயாரிக்கும் கம்பெனிகள் மூடப்பட்டது. இதனால் 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்துவிட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர், மண்டையூர், நல்லூர் என திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு புறங்களிலும் சிறியது முதல் பெரியது வரை 150க்கும் மேற்பட்ட கம்பெனிகள் செயல்பட்டு வந்தது. இந்த கம்பெனிகளில் பாய்லர் தயாரிப்பு, விவமானங்களின் உதிரி பாகங்கள் தயாரிப்பு, பெரிய கம்பெனிகளுக்கு தேவையான இரும்பு தூண்கள் உள்ளிட்ட அனைத்து வகையான தாயாரிப்புகளும் செய்யப்பட்டு வந்தது. இந்த கம்பெனிகளில் பிட்டர், வெல்டர் மற்றும் தொழிலாளிகள் என 8 ஆயிரம்பேர் நேரடியாக பணியாற்றி வந்தனர். மேலும் மேர்பார்வையாளர்கள், மேலாளர்கள் என 1000 பேர் பணியாற்றி வந்தனர்.

இதேபோல் அவர்களுக்கு தேவையான உணவு தயாரித்தல் உள்ளிட்ட பணிகளில் 1000பேர் மறைமுக பணியாளர்களாக பணியாற்றி வந்தனர். இந்த பணிகளில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை, அன்னவாசல், குன்றாண்டார்கோவில் ஆகிய ஒன்றியங்களில் உள்ள 500க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பணிக்கு வந்து சென்றனர். திருச்சி மாவட்டத்தில் திருச்சி மாநகர், திருவெறும்பூர், மணிகண்டம் ஒன்றியம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் பணிக்கு வந்து சென்றனர். குறிப்பாக ஐடிஐ, டிப்ளமோ படித்தவர்களுக்கு இந்த கம்பெனிகளில் முன்னுரிமை வழங்கி பணிகள் வழங்கியது. இதனால் அந்த பகுதியில் படித்தவுடன் வேலை கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டது. தனியார் கம்பெனிகளுக்கு இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பெல் நிறுவனம் மூலம் பல ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டது.

பெல் நிறுவனம் வழங்கிய ஒப்பந்தங்களை பெற்று இந்த நிறுவனங்கள் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் பணிகளை முடித்து அவர்களிடம் ஒப்புதலுடன் அனுப்பி வைக்கப்படும். அவர்கள் இதற்கான தொகையை வழங்குவார்கள். இப்படித்தான் இந்த கம்பெனிகள் செயல்பட்டு வந்தது. இதனால் இந்த கம்பெனிகளில் இரவு பகலாக பணிகள் நடைபெற்று வந்தது. பணியாளர்கள் தேவையும் அதிகரித்து கொண்டே இருந்தது. ஒப்பந்தங்களை பெற்ற கம்பெனிகள் குறைந்தது 50 பணியாளர்களை வைத்து பணியாற்றுவர். ஒருவரே மூன்று அல்லது நான்கு கம்பெனிகளில் ஒப்பந்தம் எடுத்திருப்பார். இதில் அவரிடம் சுமார் 150 முதல் 200 பேர் பணியாற்றுவார்கள். இதனால் அவர் ஒரு முதலாளியாக திகழ்வார். இப்படி நூற்றுக்கணக்கானோருக்கு வேலை வழங்கி வந்த முதலாளிகள் கம்பெனிகளை மூடியதால் தொழிலாளர்களாக மாறிவிட்டனர். மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கை, கொள்கை முடிவால் பெல் நிறுவனம் தனியார் கம்பெனிகளுக்கு வழங்கிய ஒப்பந்தத்தை திடீரென நிறுத்தியது. இதனால் கடந்த 2012ம் ஆண்டு முதல் படிப்படியாக இந்த கம்பெனிகள் தன்னுடைய செயல்பாடுகளை நிறுத்தியது.

இதனால் ஊழியர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டு படிப்படியாக 100க்கும் மேற்பட்ட கம்பெனிகள் மூடப்பட்டுள்ளது. இதனால் இந்த கம்பெனிகளில் பணியாற்றிய 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தற்போது பணியில்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது ஒரு சில கம்பெனிகள் அவர்களின் சொந்த செல்வாக்கை பயன்படுத்தி செயல்பட்டு வந்தாலும், அவர்களால் முன்பு வழங்கியதுபோல் வேலைவாய்ப்புகளை வழங்க முடியவில்லை. இந்த வேலையிழப்புக்கு முக்கிய காரணம் மத்திய அரசின் கொள்கை முடிவுதான். அவர்களின் அந்த முடிவின் காரணமாக பெல் ஒப்பந்தம் வழங்கவில்லை. எனவே ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்க மாநில அரசு தகுந்த முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : companies , Boiler and aerospace companies shut down due to federal economic action: 10,000 lose their jobs
× RELATED மருந்து நிறுவனங்களிடமும் பாஜக அதிக நன்கொடை..!!