×

ஆக்கிரமிப்பால் வீணாக கடலில் கலக்கும் மழைநீர்: அய்யனார் அணை தூர்வாரப்படுமா? 50க்கும் அதிக கிராம விவசாயிகள் தவிப்பு

பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சேடபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது எம்.கல்லுப்பட்டி. இந்த ஊரின் மேற்கே மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான அய்யனார் அணை உள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள சதுரகிரி, யானைகெஜம் உள்ளிட்ட மலைப்பகுதியிலிருந்து நீர் வரத்து இருக்கிறது. அணையின் அகலம் அதிகம் இருப்பினும், கொள்ளளவான ஆழம் மிகக் குறைவாக இருக்கிறது. மழைக்காலங்களில் அணைக்கு வரக்கூடிய தண்ணீர் குறைந்த அளவே தேங்கி, மீதமுள்ள தண்ணீர் வெளியில் ஓடி விரயமாகிறது. இந்த அணையை நம்பியே 50க்கும் அதிக கிராமங்களின் மக்கள், 3 ஆயிரத்து 500 ஏக்கர் பரபரப்பளவிலான நிலம் இருக்கிறது.

ஆனால் தண்ணீர் தேங்காததால், நீர் பற்றாக்குறையினால் இந்த விளைநிலங்கள் தொடர் பெரும் பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றன. மானாவாரி விவசாயமே நடந்து வருகிறது. இப்பகுதி விவசாயிகள் பலமுறை அதிகாரிகளிடம் புகார் மனுக்கள் கொடுத்தும், இதுவரை பொதுப்பணித்துறை நிர்வாகமோ, மாவட்ட அதிகாரிகளோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அணையிலிருந்து வெளியேறக்கூடிய குண்டாறு வடிகால் தண்ணீர் சூலப்புரம், பூசலப்புரம், திரளி, அத்வாணி ஆற்றுப்பாலம் வழியாக கவுண்டமாநதியில் சேர்கிறது. இந்தப்பகுதியிலுள்ள 300க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு இந்த அய்யனார் அணையிலிருந்து வெளியேறக்கூடியத் தண்ணீர் போய்ச் சேர்கிறது.

ஆனாலோ அணையை ஒட்டிய விவசாயிகள் நீரைத் தேக்கி வைத்து, விவசாயித்திற்கு பலனடைய முடியவில்லை. அதிக தண்ணீர் வரத்து காலங்களில் கடலில் போய் சேரும் வகையில் தண்ணீர் வீணாகிறது. விவசாயி எம்.கல்லுப்பட்டி ராமர் கூறும்போது, ‘‘எங்கள் பகுதி அய்யனார் அணையை ஆழப்படுத்தக்கோரி பலதரப்பட்ட போராட்டங்கள் நடத்தியும், நடவடிக்கை இல்லை. ஏற்கனவே, இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத் திட்டமான டேராபாறை அணைத்திட்டம் சிறுகச் சிறுக கைவிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அய்யனார் அணையை ஆழப்படுத்தும் திட்டத்தையாவது இப்போதைக்கு நிறைவேற்றினால் விவசாயிகளை காப்பாற்றிய புண்ணியம் கிடைக்கும்’’ என்றார்.

Tags : sea ,Will Ayyanar Dam ,village farmers , Rainwater wasted in the sea due to occupation: Will Ayyanar Dam be disturbed? More than 50 village farmers are suffering
× RELATED அந்தமான் கடலில் ருத்லேண்ட் தீவு அருகே...