×

கொரோனா பலகட்ட ஊரடங்கு தளர்வுக்கு பிறகும் துவங்காத பயணிகள் ரயில் சேவை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தினர் தவிப்பு

நெல்லை: கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட பயணிகள் ரயில் சேவை 10 மாதங்களை கடந்தும் துவக்கப்படாததால், பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பஸ்களில் கூட்டம் அலைமோதும் சூழலில், பாசஞ்சர் ரயில்கள் இயக்கத்தை பயணிகள் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். தமிழகத்தில் போக்குவரத்து அடிப்படையில் பொதுமக்களுக்கு சவுகரியமான வசதிகளை  உருவாக்கி தருவது பயணிகள் ரயில் சேவையாகும். குறைந்த கட்டணத்தில் அதிக தூரம் செல்ல பொதுமக்கள் பாசஞ்சர் ரயில்களையே பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலை காரணம் காட்டி கடந்த மார்ச் 22ம் தேதி ரயில்கள் இயக்கம் நிறுத்தப்பட்டது. ஊரடங்கு தளர்வில் செப்டம்பர் மாதம் முதல் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டுமே சென்னை, கோவை, திருச்சி, திருவனந்தபுரம், மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் பாசஞ்சர் ரயில்கள் இயக்கம் குறித்து ரயில்வே சார்பில் எவ்வித அறிவிப்பும் இல்லை. பயணிகள் ரயில்களை இயக்கிட வேண்டும் என எம்.பி.க்களும், பயணிகள் சங்கத்தினரும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா பயம் நீங்கி தற்போது சகஜநிலை வந்துவிட்டது. அனைத்து அலுவலகங்களும், பஸ் போக்குவரத்து உள்ளிட்டவை முன்பு போல முழுவீச்சில் இயங்கி வருகின்றன. சுற்றுலாதலங்கள் கூட செயல்பட தொடங்கிவிட்டன. பள்ளி, கல்லூரிகளும் கூட  திறக்கப்பட்டுள்ளன. ஆனால் பாசஞ்சர் ரயில்கள் இயக்கம் மட்டும் தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டு வருகிறது. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து தென்மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தை சேர்ந்த அந்தோணி ஆரோக்கியராஜ் கூறுகையில், ‘‘கொரோனாவிற்கு பின்னர் தெற்கு ரயில்வே எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு முக்கியத்துவத்தை பாசஞ்சர் ரயில்களுக்கு அளிப்பதில்லை.

90 சதவீதம் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நெல்லையை மையமாக கொண்டு இயங்கி வரும் நிலையில், ஒரு பாசஞ்சர் ரயில் கூட இன்று வரை இயங்கவில்லை. பஸ்கள் பயணத்தை விட பயணிகள் ரயில் பயணத்தையே பெரும்பாலும் விரும்புகின்றனர். ரயில்களில் உணவருந்தி கொண்டும், தூங்கி கொண்டும் கூட பயணிக்கலாம். பாசஞ்சர் ரயில்களில் கட்டணமும் மிககுறைவு. சீசன் டிக்கெட் உள்ளிட்ட சலுகைகள் பயணிகளின் பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது. எனவே விரைந்து பாசஞ்சர் ரயில்களை இயக்கிட வேண்டும்’’ என்றார். நெல்லையை பொறுத்தவரை செங்கோட்டை, திருச்செந்தூர், நாகர்கோவில், தூத்துக்குடி உள்ளிட்ட நகரங்களுக்கு பயணிகள் ரயில் இன்றி பொதுமக்கள் திண்டாடுகின்றனர். குறைவான வழித்தடங்களில் இயக்கப்படும் பஸ்களில் தினமும் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

அதிலும் சமீபத்தில் பொங்கலை ஒட்டி தாமிரபரணியில் வெள்ளம் சென்றபோது, பஸ்கள் பல வழித்தடங்களில் நிறுத்தப்பட்டது. அப்போது பொதுமக்கள் பாசஞ்சர் ரயில்கள் இல்லாததால், கடும் திண்டாட்டத்திற்கு உள்ளாயினர். நெல்லைக்கு வரும் அரசு மற்றும் தனியார் பஸ்களும் கூட்டத்தை அள்ளிக்கொண்டு வருகின்றன. பயணிகள் காலை, மாலை வேளைகளில் பஸ்களில் நின்று கொண்டே பயணிக்கின்றனர். நெல்லை- திருச்செந்தூர், நெல்லை- செங்கோட்டை, நெல்லை- நாகர்கோவில் மார்க்கங்களில் பாசஞ்சர் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் பாதிப்பில் உள்ளனர். இவ்வழித்தடங்களில் தற்போது இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் கட்டணம் மும்மடங்காக இருப்பதால், பயணிகள் ரயில் நிலையம் பக்கம் தலைக்காட்டுவதே இல்லை. எனவே பயணிகளின் சிரமங்களை கருத்தில் கொண்டு, விரைந்து பாசஞ்சர் ரயில்களை இயக்கிட வேண்டும்.

Tags : corona curfew ,suffering ,Nellai ,Thoothukudi district , Passenger train service not resumed after corona curfew: Nellai, Thoothukudi
× RELATED நெல்லை மக்களவை தொகுதி பாஜ, அதிமுக வேட்பாளர்கள் சொத்து பட்டியல்