உத்தமபாளையத்தில் அன்றாடம் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் வாகனங்கள்

உத்தமபாளையம்: உத்தமபாளையத்தில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகனங்கள் அன்றாடம் திணறுகின்றன. இதனை ஒழுங்குபடுத்த போலீசார் வருவதில்லை என புகார் எழுந்துள்ளது. உத்தமபாளையம் தாலுகா தலைநகர் என்பதால் தினந்தோறும் இங்குள்ள தாலுகா அலுவலகம், அரசு மருத்துவமனை, வட்டார போக்குவரத்து அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களுக்கு பல நூற்றுக்கணக்கான மக்கள் வருகின்றனர். டூவீலர்கள், கார்கள் அதிகம் வருவதாலும் உத்தமபாளையம் -தேனி தேசிய நெடுஞ்சாலையாக உள்ளதாலும் அதிகமான சரக்கு வாகனங்கள், கனரக வாகனங்கள், தொலைதூர வாகனங்கள், ஆம்னி பஸ்கள், அதிகம் வருகின்றன.

இதனால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏட்றபட்டு வருகிறது. குறிப்பாக, உத்தமபாளையத்தில் உள்ள பஸ்ஸ்டாண்ட், தேரடி கறிக்கடை முக்கு, பைபாஸ், கிராமச்சாவடி உள்ளிட்ட சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் சிக்கிக் கொள்கின்றன. இதனால் வாகனங்கள் தட்டுத்தடுமாறி செல்ல வேண்டியுள்ளது.வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்குவது மட்டுமல்லாமல், அந்த வழியே வரக்கூடிய அவசரகால ஆம்புலன்ஸ்களும் அடிக்கடி சிக்கிக் கொள்கின்றன. உத்தமபாளையத்தில் போக்குவரத்து நெரிசலை, கட்டுப்படுத்த தினந்தோறும் பைபாஸ், பஸ் ஸ்டாண்ட், கிராமச்சாவடி உள்ளிட்ட சாலைகளில் போலீசார் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவார்கள்.கடந்த ஒருவருடமாகவே போக்குவரத்தை ஒழுங்குபடுத்த காவல்துறை அதிகாரிகள் வருவதில்லையென்ற குற்றச்சாட்டு உள்ளது.

இதனால் இஷ்டத்திற்கு வாகனங்கள் இயக்கப்படுவதும், இருபது அடி பாதையில் 4 வாகனங்கள் ஒரே நேரத்தில் செல்லும் போதும், போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது. இதனை சரி செய்ய வேண்டிய காவல்துறை, அதிகாரிகளோ, எதனையும் கண்டும், காணாமல் உள்ளனர். இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தாலும் உடனடியாக வருவதில்லை. இதனால் பகல் நேரங்களில் மட்டும் அல்லாமல் இரவு 5 மணியிலிருந்தும் போக்குவரத்தில் பெரும் அளவில் சிக்கல் ஏற்படுகிறது.இதில் இருளில் சிக்கித் தவிக்கும் வாகனங்களும் அதிகம். எனவே, போக்குவரத்து நெரிசலை உடனடியாக சரி செய்திட அதிகாரிகள் முன்வர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>