×

பிரேசிலுக்கு போய்ச் சேர்ந்த இந்திய தடுப்பூசிகள்..! ராமாயண கதையை சித்தரிக்கும் படத்துடன் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த பிரேசில் அதிபர்

டெல்லி; இந்தியா அனுப்பி வைத்த 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் பிரேசிலுக்கு போய்ச் சேர்ந்தன. அதற்கு ராமாயண கதையை சித்தரிக்கும் படத்துடன் பிரதமர் மோடிக்கு பிரேசில் அதிபர் நன்றி தெரிவித்துக் கொண்டார். கொரோனா தடுப்பூசிகளை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள், சுகாதார பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகின்றன. அதே சமயத்தில், அந்த தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய பல்வேறு நாடுகள் இந்தியாவை அணுகி உள்ளன. பூடான், நேபாளம், மாலத்தீவு போன்ற நாடுகளுக்கு இந்தியா மானிய உதவியாக அவற்றை வழங்கி உள்ளது.

சவுதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளுக்கு வணிகரீதியாக அனுப்பி வருகிறது. கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, இந்தியாவுக்கு அடுத்து 3-வது இடத்தில் உள்ள பிரேசிலுக்கு நேற்று முன்தினம் 20 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகளை இந்தியா அனுப்பி வைத்தது. தடுப்பூசிகளுடன் சென்ற விமானம், சா பாலோ மாகாணத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு தரை இறங்கியது. அந்நாட்டு சுகாதாரத்துறை மந்திரி எட்வர்டோ பசுல்லோ வரவேற்றார். பின்னர், மற்றொரு விமானத்தில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவுக்கு தடுப்பூசிகள் கொண்டு செல்லப்பட்டன.


இதையடுத்து, பிரதமர் மோடிக்கு பிரேசில் அதிபர் ஜேர் போல்சனரோ நன்றி தெரிவித்துள்ளார். இதற்காக தனது சமூக வலைத்தளத்தில் ராமாயண சம்பவத்தை சித்தரிக்கும் படத்தை வெளியிட்டுள்ளார். ராமாயணத்தில், போரில் லட்சுமணன் காயமடைந்தபோது, அவரது உயிரை காப்பாற்றும் சஞ்சீவி மூலிகையை தேடிச்சென்ற அனுமன், அதை கண்டுபிடிக்க முடியாமல் மலையையே தூக்கி வந்தார். அதை குறிப்பிடும்வகையில், கொரோனா தடுப்பூசிகள், தடுப்பு மருந்து அடங்கிய குப்பிகள் ஆகியவை கொண்ட மலையை இந்தியாவில் இருந்து பிரேசிலுக்கு அனுமன் தூக்கிச் செல்வதுபோல் அந்த படம் அமைந்திருந்தது.

அதனுடன், பிரேசில் அதிபர் தனது பதிவில், ‘‘வணக்கம், பிரதமர் நரேந்திர மோடி. இந்தியா போன்ற ஒரு கூட்டாளியை பெற்றதை பெருமையாக கருதுகிறோம். தடுப்பூசி ஏற்றுமதி செய்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார். அதற்கு பிரதமர் மோடி, டுவிட்டரில் பதில் அளித்துள்ளார். அதி்ல், ‘‘கொரோனாவுக்கு எதிரான போரில் பிரேசிலின் நம்பிக்கைக்கு உரிய கூட்டாளியாக இருப்பது எங்களுக்குத்தான் பெருமை. சுகாதாரத்துறையில் தொடர்ந்து ஒத்துழைப்பை வலுப்படுத்துவோம்’’ என்று கூறியுள்ளார். கடந்த ஆண்டு, கொரோனா சிகிச்சைக்காக, ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை பிரேசிலுக்கு இந்தியா வழங்கியது. அப்போதும், இதே ராமாயண சம்பவத்தை குறிப்பிட்டு, பிரேசில் அதிபர் நன்றி தெரிவித்து இருந்தார்.

Tags : Indian ,Brazil ,Modi ,President , Indian vaccines that went to Brazil ..! The President of Brazil thanked Prime Minister Modi with a picture depicting the story of Ramayana
× RELATED மக்களை வஞ்சிக்கும் மோடியின் பாஜக அரசை...