மதுபோதையில் மோசமான வகையில் நடந்து கொள்ளும் நடிகர் விஷ்ணு விஷால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: பாதிக்கப்பட்டவர் கமிஷனர் அலுவலகத்தில் புகார்

சென்னை: சென்னை, கோட்டூர், நாயுடு தெருவை சேர்ந்த ரங்கபாபு. இவர் நேற்று வேப்பேரி கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நான் மேற்கண்ட முகவரியில் கடந்த மூன்று வருடமாக வசித்து வருகிறேன். இங்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இரண்டாம் தளத்தில் நடிகர் விஷ்ணு விஷால் குடிவந்தார். அவர் அங்கு வந்த நாளிலிருந்து தினமும் இரவில் குடித்து விட்டு மிகவும் மோசமான வகையில் நடந்து கொள்கிறார். தினமும் இரவில் குடித்துவிட்டு பல ஆண் நண்பர்களுடனும், பெண்களுடனும் வீட்டுக்கு வருவதும், அதிக அளவில் ஒலி எழுப்பும் வகையில் பாடல்கள் போட்டு கேட்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.நேற்று முன்தினம் இரவும் அதேபோல அவர் நடந்துகொள்ள இரவு 10.30 மணியளவில் பல ஆண் மற்றும் பெண் நண்பர்களுடன் அங்கு வந்து குடித்துவிட்டு இரவு 1.30 மணியளவில் அதிக சவுண்ட் வைத்து தொந்தரவு செய்து கொண்டிருந்தார்.

நான் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பவர் அவசர எண்ணிற்கு போன் செய்து காவலர்களை அழைத்தோம். ஆனால் அவர் அவர்களையே மிகவும் தரக்குறைவாக மோசமான வார்த்தைகளால் திட்டி, எங்களையும் நண்பர்களை வைத்து  அடிக்க வந்தார். மேலும் அவர், எனது அப்பா ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி, என்னிடம் வைத்துக் கொண்டால் உங்களை விடிவதற்குள் முடித்து விடுவேன். நீ எந்த காவல் நிலையம் சென்று புகார் செய்தாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி தகாத வார்த்தையால் பேசி சண்டையில் ஈடுபட்டார். இதனால் இந்த குடியிருப்பில் வசிக்கும் அனைவரும் சிரமத்திற்கும், மனஉளைச்சலுக்கும் ஆளாகியிருக்கிறோம். இதேபோன்று கடந்த 4 மாதங்களாக எங்களுக்கு துன்பத்தை ஏற்படுத்தி வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.

Related Stories:

>