நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை விசாரணைக்கு நேரில் ஆஜராக குருமூர்த்திக்கு சம்மன்: அட்வகேட் ஜெனரல் உத்தரவு

சென்னை: நீதிபதிகளை அவதூறாக பேசிய விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க அனுமதி கோரிய புகார் மீதான  விசாரணைக்கு ஆஜராகுமாறு குருமூர்த்திக்கு அட்வகேட் ஜெனரல்  சம்மன் அனுப்பியுள்ளார். அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணிடம் மூத்த வக்கீல் எஸ்.துரைசாமி கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆடிட்டர் குருமூர்த்தி நீதிபதிகளை மிகவும் அவமானப்படுத்தும் வகையில் பேசியுள்ளார். நீதிபதிகள் நியமனம் தொடர்பாக அவர் பேசியது நீதித்துறையை களங்கப்படுத்தியுள்ளது. இதுபோன்று, பலமுறை நீதிபதிகளை விமர்சனம் செய்து குருமூர்த்தி பேசியுள்ளார். டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியை விமர்சனம் செய்து நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளானார். பின்னர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு தப்பினார். தொடர்ந்து தவறான தகவல்களையே பரப்புவதை வாடிக்கையாக கொண்டுள்ள குருமூர்த்தி, நீதிபதிகள் நியமனத்தை களங்கப்படுத்தியுள்ளார்.

உச்ச நீதிமன்ற கொலீஜியம் திறமையான நபர்களை தேர்வு செய்து உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிப்பது தெரிந்திருந்தும் நீதிபதிகள் நியமனம் குறித்து அவதூறு பரப்பியுள்ளார். எனவே குருமூர்த்தி மீது நீதிமன்ற அவமதிப்பு (கிரிமினல்) நடவடிக்கை எடுக்க அனுமதி வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை பரிசீலித்த அட்வகேட் ஜெனரல் புகார் மீது பிப்ரவரி 16ல் நடக்கும் விசாரணைக்கு குருமூர்த்தி நேரிலோ அல்லது வக்கீல் மூலமாகவோ ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியுள்ளார்.

Related Stories:

>