இந்திய உளவுத்துறைகள் அதிர்ச்சி நாடு கடத்தப்படுவதில் இருந்து தப்ப மாற்றுவழி கண்டுபிடித்த மல்லையா: இங்கிலாந்தில் தஞ்சம் கேட்டு ரகசிய விண்ணப்பம்

லண்டன்:இந்தியாவில் விமான நிறுவனம், மதுபான தொழிற்சாலை உட்பட பல்வேறு தொழில்களில் பிரபலமாக விளங்கிய விஜய் மல்லையா, வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி மோசடி செய்தார். அதை திருப்பிச் செலுத்தாமல், லண்டனுக்கு தப்பிச் சென்றார். அவர் மீது சிபிஐ.யும், அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரித்தன. இங்கிலாந்தில் இருந்து அவரை நாடு கடத்துவதற்கான முயற்சிகளை இவை எடுத்தன. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தும்படி இங்கிலாந்தை சேர்ந்த வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றம் கடந்த 2018 ஆண்டு, டிசம்பரில் உத்தரவிட்டது. இதை எதிர்த்து லண்டன் நீதிமன்றத்திலும், அதைத் தொடர்ந்து அந்நாட்டு உச்ச நீதிமன்றத்திலும் மல்லையா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து, அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் உத்தரவில், இங்கிலாந்து உள்துறை அமைச்சரான பிரீ்த்தி படேலும் கடந்தாண்டு கையெழுத்திட்டார்.

ஆனால், தற்போது வரையில் மல்லையா நாடு கடத்தப்படவில்லை. அவர் லண்டனிலேயே தங்கியுள்ளார். இதற்கு காரணம், இங்கிலாந்து நாட்டு குடியுரிமையை அவர் பெற்றிருப்பதுதான். இது தொடர்பான வழக்கும் இங்கிலாந்து நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் முடிவு தெரிய எவ்வளவு காலமாகும் என்பதை கூற முடியாது என சட்ட நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் நாடு கடத்தப்படுவதில் இருந்து தப்பிக்க, ‘மாற்று வழி’யை மல்லையா பயன்படுத்தி இருக்கிறார். தனக்கு தஞ்சம் அளிக்கும்படி, இங்கிலாந்து உள்துறையிடம் அவர் விண்ணப்பித்து இருக்கிறார். இந்த வேலையை அவர் ரகசியமாக செய்திருப்பதை, இந்திய உளவுத்துறைகள் கண்டுபிடிக்க தவறி விட்டன. இது பற்றி மல்லையாவின் வழக்கறிஞர் பிலிப் மார்ஷல் கூறியுள்ளார். இது, மல்லையாவை நாடு கடத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சிபிஐ, அமலாக்கத் துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தஞ்சம்கிடைக்குமா?

இங்கிலாந்தில் மல்லையா தஞ்சம் கேட்டு விண்ணப்பம் செய்திருப்பது பற்றி அந்நாட்டு சட்ட நிபுணர்கள் சிலர் கூறுகையில், ‘‘நாடு கடத்துவதற்கான உத்தரவை இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் பிறப்பிக்கும் முன்பாக, தஞ்சம் கேட்கும் விண்ணப்பத்தை மல்லையா கொடுத்தாரா என்பதை பொருத்தே, இதன் முடிவுகள் அமையும். இதற்காக, மல்லையா கடுமையாக வாதாட வேண்டியிருக்கும். நாடு கடத்தலை தடுப்பதற்கான வாய்ப்பு, தஞ்சத்தின் மூலமாக கிடைக்க இங்கிலாந்து சட்டங்களில் இடம் இருக்கிறது,’’ என்றனர்.

Related Stories:

More