டிராக்டர் பேரணியை சீர்குலைப்பதற்காக விவசாய சங்க தலைவர்களை கொல்ல சதி: கூட்டத்தில் ஊடுருவிய கூலிப்படை ஆசாமி சிக்கினான்

புதுடெல்லி: புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்த உள்ள பிரமாண்ட டிராக்டர் பேரணியை சீர்குலைப்பதற்காக, விவசாய சங்கத் தலைவர்களை கொல்லும் திட்டத்துடன் போராட்டக் களத்தில் ஊடுருவிய கூலிப்படை ஆசாமி சிக்கினான். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு கடந்த செப்டம்பரில் அமல்படுத்திய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேசம் உட்பட பல்வேறு மாநில விவசாயிகள் கடந்த 59 நாட்களாக டெல்லி எல்லையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நடத்திய 11 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன. இதையடுத்து, உலக நாடுகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக குடியரசு தினத்தன்று டெல்லியில் பிரமாண்ட டிராக்டர் பேரணி ஏற்கனவே அறிவித்தப்படி நடத்தப்படும் என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. இது தொடர்பாக நடந்த ஆலோசனையில், டெல்லி வெளி வட்டப்பாதையில் பேரணி நடத்த போலீசார் அனுமதி அளித்தனர். ஆனால், விவசாய சங்கங்கள் இதற்கு உடன்படவில்லை.

டெல்லியில்தான் பேரணி நடத்தப்படும் என திட்டவட்டமாக அறிவித்துள்ளன. இதனால், டெல்லியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏற்கனவே நூற்றுக்கணக்கான டிராக்டர்களில் டெல்லியை நோக்கி விவசாயிகள் வந்து கொண்டிருக்கின்றனர். மேலும், இந்த பேரணியில் பொது மக்களும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு டெல்லி சிங்கு எல்லையில் உள்ள போராட்ட குழுவினரின் மத்தியில் முகக்கவசம் அணிந்தபடி சந்தேகத்துக்குரிய வகையில் ஒருவர் சுற்றித் திரிந்தார். அவர் மீது சந்தேகம் கொண்ட விவசாயிகள், பிடித்து விசாரித்தனர். அதில் அவர் விவசாயி இல்லை என்பதும், அரியானா மாநிலத்தில் உள்ள சோனிபட் பகுதியை சேர்ந்த யோகேஷ் என்பதும் தெரிந்தது. விவசாய சங்க பிரதிநிதிகள் அவரிடம் விசாரித்ததில், குடியரசு தினத்தன்று நடைபெற இருக்கும் டிராக்டர் பேரணியை சீர்குலைக்க, விவசாய சங்கத் தலைவர்களில் 4 பேரை சுட்டு கொல்வதற்கு சதி திட்டம் தீட்டப்பட்டு உள்ளதாக தெரிவித்தான்.

பேரணியின்போது தனது கூட்டாளிகளும் கூட்டத்துக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த இருப்பதாகவும் கூறினான். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விவசாய சங்க பிரதிநிதிகள் அவனை ஊடகங்களில் பேட்டி கொடுக்க வைத்தனர். முகத்தை மூடியபடி யோகேஷ் அளித்த பேட்டியில், ‘‘ஊடகங்களில் பேட்டி அளிக்கும் விவசாய சங்கங்களின் பிரபல தலைவர்களில் 4 பேரை சனிக்கிழமை சுட்டுக் கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அதே போன்று, குடியரசு தினத்தன்று நடைபெறும் டிராக்டர் பேரணியை சீர்குலைக்கும் வகையில் போலீஸ் அதிகாரியை சுடவும், இதனால் ஏற்படும் கலவரத்தை பயன்படுத்தி விவசாயிகள் மீது கடும் தாக்குதல் நடத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது,’ என்று கூறினான். அதன் பிறகு, சோனிபட் போலீசாரிடம் அவன் ஒப்படைக்கப்பட்டான். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு அரியானா குற்றப்பிரிவு போலீசார் அளித்த பேட்டியில், ‘பிடிப்பட்ட வாலிபரிடம் ஆயுதங்கள் எதுவும் இல்லை. அவரிடம் நடத்திய விசாரணையில்  விவசாயிகள் கூறியது போல எந்த சதி திட்டமும் தீட்டியதாக தெரியவில்லை,’ என்று தெரிவித்தனர். இதனால், டெல்லியில் நடைபெற இருக்கும் டிராக்டர் பேரணியை சீர்குலைக்க முயற்சித்தது யார்? விவசாய பிரதிநிதிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமா? என்ற பெரும் குழப்பமும், பரபரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

3 இடங்களில் பேரணி நடத்த டெல்லி போலீஸ் அனுமதி

விவசாய சங்க பிரதிநிதிகள் - டெல்லி போலீசார் இடையே நேற்று நடந்த பேச்சுவார்த்தையில், 100 கிமீ தூரம் டிராக்டர் பேரணி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  இது குறித்து விவசாய சங்க தலைவர்கள் கூறுகையில்,  “டிராக்டர் பேரணி டெல்லியின் காஜிபூர், சிங்கு, திக்ரி எல்லைகளில் இருந்து தொடங்கும். ஆயிரக்கணக்கான டிராக்டர்கள் பங்கேற்க உள்ளதால், பல சாலைகள் வழியாக செல்ல இருக்கிறோம். பேரணிக்காக டெல்லி போலீசார் தடுப்புகளை அகற்ற உள்ளனர். பேரணி முடிந்ததும், விவசாயிகள் மீண்டும் தங்களின் எல்லைகளுக்கு திரும்புவார்கள்,” என்றனர்.

Related Stories:

>