×

தென் சீன கடல் பகுதிகளில் அந்நிய படகு, கப்பல்களை கண்டதும் தகர்க்க சீனா உத்தரவு

பீஜிங்: தென் சீன கடல் பகுதி முழுவதையும் சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்திய பெருங்கடலிலும் பெரும் பகுதியை ஆக்கிரமிக்க முயல்கிறது. இதற்கு இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அமெரிக்க அதிபராக டிரம்ப் இருந்தபோது, சீனாவை சீண்டும் வகையில் தென் சீன கடலில் அடிக்கடி தனது நாட்டு விமானத் தாங்கி கப்பல்களை அனுப்பி வலம் வரச் செய்தார். இந்நிலையில், தன்னால் சொந்தம் கொண்டாடப்படும் தென் சீன கடல் பகுதிகளில் வெளிநாட்டு கப்பல்கள், படகுகள், தீவு திட்டுகளில் வெளிநாடுகளின் கட்டுமானங்களை கண்டால், உடனடியாக தாக்குதல் நடத்தி தகர்க்கும்படி தனது நாட்டு கடலோர காவல் படைக்கு சீன அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக சட்டத்தை நேற்று முன்தினம் நிறைவேற்றியது. அதில், ‘சீனாவின் இறையாண்மையை பாதுகாக்க, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் கடலோர காவல்படை மேற்கொள்ளலாம். இதில் ஆயுதங்களைப் பயன்படுத்தவும் அனுமதி வழங்கப்படுகிறது.

சீனாவின் இறையாண்மை அந்நிய சக்திகளால் முறைகேடாக பயன்படுத்துவதைத் தவிர்க்க இத்தகைய நடவடிக்கை அவசியம்,’ என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு, உலக நாடுகள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. என்ன செய்யப்போகிறது அமெரிக்கா? தென் சீனக் கடலில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த டிரம்ப் நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்தது. இதற்காக ஆயுதங்கள் தாங்கிய கப்பல்களையும் அங்கு நிறுத்த உத்தரவிட்டிருந்தார். சீனாவை எதிர்க்கும் தைவான் போன்ற நாடுகளுக்கும் வெளிப்படையாகவே பல ஆதரவு நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டது. ஆனால், அமெரிக்காவில் தற்போது புதிய நிர்வாகம் அமைந்திருப்பதால் தென் சீனக் கடல் விவகாரத்தில் வெள்ளை மாளிகை என்ன முடிவெடுக்கப் போகிறது என்பது இனிதான் தெரிய வரும்.

* இங்கு மீன்வளம், எண்ணெய், இயற்கை எரிவாயு போன்ற இயற்கை வளங்கள் மிகுந்துள்ளதால் மொத்த பிராந்தியத்தையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர சீனா முயற்சிக்கிறது.
* சீனா, மலேசியா, பிலிப்பைன்ஸ், தைவான் போன்ற பல நாடுகளுக்கு தென் சீனக் கடல் பொதுவான இடமாக உள்ளது.
* இதனால், தென் சீனக் கடல் பிராந்தியத்தில் இருக்கும் அண்டை நாடுகளுடன் அது தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகிறது.
* தற்போதைய புதிய சட்டம் அமலுக்கு வந்திருக்கும் நிலையில், அதனை முறைகேடாகப் பயன்படுத்தி தென் சீனக் கடலை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் அபாயம் உள்ளது.


Tags : China ,demolition ,South China Sea , In parts of the South China Sea Foreign boat, ships China orders demolition on sight
× RELATED தென் சீன கடல் பகுதியில் நான்கு...