×

ஜல்லிக்கற்கள் கொட்டி 3 மாதங்களாகியும் சாலை அமைக்காமல் அதிகாரிகள் மெத்தனம்: பொதுமக்கள் பரபரப்பு குற்றச்சாட்டு

*பணி முடியாமலே ஒப்பந்ததாரருக்கு பணம் பட்டுவாடா?

மாமல்லபுரம்: மாமல்லபுரம் சிறப்பு நிலை பேரூராட்சியில் உள்ள தெருக்களில் ஜல்லிக்கற்கள் கொட்டி 3 மாதங்களாகியும் சாலை அமைக்காமல் உள்ளன. இதனால், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும், போடாத சாலை பணிக்கு ஒப்பந்ததாரருக்கு பணம் வழங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. மாமல்லபுரம் பேரூராட்சி வெண்புருஷம் மற்றும் மீனவர் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்குள்ள மீனவர் பகுதி, வெண்புருஷம் டேங்க் தெருவில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன், சிமென்ட் சாலை போடப்பட்டது. இந்த சாலைகளில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டு, படுமோசமாக மாறியது. இதனால், இந்த சாலைகளை முழுவதுமாக பெயர்த்தெடுத்து தார்ச்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, கடந்த 3 மாதத்துக்கு முன்பு பேரூராட்சி நிர்வாகம், மூலம் டெண்டர் விடப்பட்டது. அப்போது, ஒப்பந்ததாரர் ஒருவர் சாலை அமைக்கும் பணியை ₹75 லட்சத்துக்கு எடுத்தார்.

பின்னர், பழுதடைந்த சாலைகளை தார் சாலையாக்கும் வகையில், அச்சாலைகளை முழுவதுமாக பொக்லைன் இயந்திரம் மூலம் பெயர்த்தெடுத்து, அங்கு புதிதாக ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன. தொடர்ந்து பணிகள் மேற்கொள்ளப்படும் என பொதுமக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், திடீரென பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. இதுபற்றி கேட்டதற்கு, அதிகாரிகள் தரப்பில் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. இந்நிலையில், 3 மாதங்களை கடந்த பின்னரும் இதுவரை, சாலை அமைக்கும் பணி தொடங்கவில்லை. இதனால், வாகன ஓட்டிகள் சாலையில் செல்லும்போது டயர் பஞ்சர் ஆவதும், நடந்து செல்லும் மக்களுக்கு, கற்கள் குத்தி காலில் காயம் ஏற்படுவதும் தொடர்கதையாக உள்ளது. இதற்கிடையில், சாலை போடாமலே, அந்த பணிகளை முழுவதுமாக முடித்துவிட்டதாக, ஒப்பந்ததாரருக்கு பேரூராட்சி நிர்வாகம் பணம் பட்டுவாடா செய்துவிட்டதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் கூறுகின்றனர்.

இதுபற்றி, மாமல்லபுரம் பேரூராட்சி அதிகாரிகள், பொதுமக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து பேரூராட்சி அதிகாரிகளை கேட்டபோது, வெண்புருஷம் மற்றும் மீனவர் பகுதியில் சாலை அமைப்பதற்காக டெண்டர் மட்டுமே விடப்பட்டுள்ளது. சாலை போடாமலே ஒப்பந்ததாரர்களுக்கு பணம் வழங்கியதாக கூறுவது தவறான தகவல். கடந்த மாதங்களில் நிவர் புயல் மற்றும் மழை காரணமாக சாலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. விரைவில் சாலை அமைக்கும் பணி தொடங்கப்படும் என்றனர்.

Tags : road , It has been 3 months since the gravel was poured Officials' complacency in not paving the road: Public agitation charge
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...