சென்னை மற்றும் புறநகர் சாலைகளில் ஊர்வலம் வாகன ஓட்டிகளை பதற விடும் மாடுகள்: விபத்துக்களை தவிர்க்க நிரந்தர தீர்வு காண கோரிக்கை

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் சாலையில் சுற்றியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே இதை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னையில் அதிகரிக்கும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் விபத்துகளும் அதிகரித்து கொண்டே வருகிறது. இதை தடுக்க பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. ஆனால் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் ஏற்படும் விபத்துகளை தடுக்க அரசு எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அதிகாலை மற்றும் மாலை வேளையில் முக்கிய சாலைகளில் மாடுகள் ஜாலியாக சுற்றிதிரிகின்றன. ஒரு சில கால்நடைகள் சாலையில் நடுவில் அமர்ந்து கொள்கின்றன.

அவற்றை அங்கிருந்து அப்புறப்படுத்த வாகன ஓட்டிகள் படாத பாடு படவேண்டியுள்ளது. குறிப்பாக மாலை வேளையில் பொதுமக்கள் அதிகம் சென்று வரும் பகுதியில் மாடுகள் சுற்றி திரிகின்றன. இதைத் தவிர்த்து முக்கிய சாலைகளில் வாகன ஓட்டிகள் வேகமாக சென்று கொண்டு இருக்கும் போது மாடுகள் திடீரென்று குறுக்கே புகுந்துவிடுகிறது. இதனால் வாகன ஓட்டிகளில் நிலை தடுமாறி கீழே  விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். இதனால் தொடர்ந்து பின்னால் வருபவர்கள் விபத்தில் சிக்கி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைகின்றனர். குறிப்பாக சென்னையில் திருவல்லிக்கேணி, ஐஸ் அவுஸ், கீழ்ப்பாக்கம், அயனாவரம், பிராட்வே, போரூர், அம்பத்தூர், திருவொற்றியூர், திருவான்மியூர், மணலி உள்ளிட்ட சென்னை புறநகர் பகுதியில் கால்நடைகள் சாலையில் திரிவது ெதாடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.

புறநகர் பகுதியில் பூந்தமல்லி, குன்றத்தூர், அய்யப்பாக்கம், பாடி, அம்பத்தூர் தொழிற்பேட்டை, அம்பத்தூர், திருமுல்லைவாயல், செவ்வாபேட்டை, தொழுவூர், காக்களூர், திருவள்ளூர், திருபாச்சூர், பாண்டூர், பட்டரைபெரும்புதூர், நாராயணபுரம் ஆகிய இடங்களில் உள்ள மாடுகள் அதிக அளவில் சாலையில் சுற்றி திரிகிறது. இதற்கு முக்கிய காரணம் மாடுகளின் உரிமையாளர்கள்தான் என  பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சென்னையில் பாலுக்காக மட்டுமே பலர் மாடுகளை வளர்கின்றனர். இவ்வாறு மாடுகளை வளர்ப்பவர்கள் காலை மற்றும் மாலை வேளையில் பாலை கறந்து விட்டு அப்படி அவிழ்த்து விட்டு விடுகின்றனர். புறநகர் பகுதியில் விவசாயத்திற்காக மாடுகள் பயன்படுத்தப்பபடுகிறது. இந்த மாடுகளை

உரிமையாளர்கள் மேய்ச்சலுக்காக காலையில் அவிழ்த்து விடுகின்றனர். பின்னர், அவைகளை பற்றி கண்டு கொள்வதில்லை. எனவே சாலையில் சுற்றி திரியும் மாடுகளை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.  இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது :

சாலைகளில் சுற்றித்திரியும் பசு, எருமை உள்ளிட்ட கால்நடைகள் பணியாளர்களால்  பிடிக்கப்பட்டு புதுப்பேட்டை ‘டி’, பெரம்பூர் ‘ஜி’ ஆகிய  மாட்டுத்தொழுவங்களில் அடைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு சென்னை மாநகராட்சியால் பிடிக்கப்படும் கால்நடைகளுக்கு அடையாளமாக மாட்டின் காது மடலில் வரிசை எண்கள் அடிப்படையில் முத்திரை வில்லை பொருத்தப்படும். முத்திரை வில்லை பொருத்தப்பட்ட கால்நடைகள் மீண்டும் பிடிக்கப்பட்டால், அவைகள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் உரிய முறையில் ஒப்படைக்கப்படும். இவ்வளவு அபராதம் விதித்தும் சென்னையில் சாலை தெருக்களில்  சுற்றி திரியும் மாடுகளை கட்டுப்படுத்துவது மிகவும் சவாலான பணியாக உள்ளது. எவ்வளவு கூறினாலும் உரிமையாளர்கள் இதை பின்பற்றுவது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

சென்னையில் இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் புறநகர் மற்றும் சுற்றியுள்ள உள்ளாட்சி அமைப்புகள் முறையான நடவடிக்கை எடுப்பதில்லை என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே சென்னை மற்றும் புறநகர் சாலைகளில் விடப்படும் மாடுகளை தடுக்க காவல் துறை உதவியுடன் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

* 2017 - 2018ம் ஆண்டு வரை சாலையில்  மாடுகளை விட்டால் 3 வயதிற்குட்பட்ட கால்நடைகளுக்கு ரூ.1000, மூன்று வயதிற்கு மேலுள்ள கால்நடைகளுக்கு ₹1250, மூன்று நாட்கள் பராமரிப்புசெலவாக  நாளொன்றுக்கு ₹100 வீதம் என்று மொத்தம் 1550 அபராதத் தொகையாக  வசூலிக்கப்பட்டு வந்தது.

* 2018 - 2019ம் ஆண்டில் இருந்து தொகை அதிகரிக்கப்பட்டு  ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

* 2018 ஏப்ரல் மாதம்  முதல் அபராதத்தொகை ரூ.10,000, ஒரு மாட்டிற்கு 3 தினங்களுக்கு பராமரிப்பு  செலவாக ரூ.750 ஆக  மொத்தம் ரூ.10,750 அபராதத் தொகையாக நிர்ணயம்  செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>