தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு: தமிழக அரசு தடுக்குமா? பால் முகவர்கள் சங்கம் கேள்வி

சென்னை: தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்ந்துள்ளது. விலை உயர்வை தமிழக அரசு தடுக்குமா என்று பால் முகவர்கள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து, பால் முகவர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கை: கடந்த 2020 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பால் தட்டுப்பாடு, மூலப்பொருட்கள் விலை உயர்வு என்கிற பொய்யான காரணத்தை கூறி தனியார் பால் நிறுவனங்கள் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.8 வரை உயர்த்தின. அதன்பிறகு மார்ச் மாதம் இறுதியில் கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் வணிகம் சார்ந்த பால் விற்பனை கடுமையாக வீழ்ச்சியடைந்தது.

இதனை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்ட தனியார் பால் நிறுவனங்கள் பால் உற்பத்தியாளர்களான விவசாய பெருமக்களிடமிருந்து கொள்முதல் செய்யும் பாலுக்கான விலையை லிட்டருக்கு ரூ.15 முதல் ரூ.20 வரை குறைத்தன. ஆனால், பொதுமக்களுக்கான விற்பனை விலையை சிறிதளவு கூட குறைக்க முன்வரவில்லை. ஊரடங்கில் கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, தற்போது முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டு விட்டதால் பால் விற்பனையும் வழக்கமான நிலைக்கு வந்திருக்கிறது. ஆனால் ஊரடங்கில் பால் விற்பனை பாதிப்பு என காரணம் சொல்லி கொள்முதல் விலையை கடுமையாக குறைத்த தனியார் பால் நிறுவனங்கள் இயல்புநிலை திரும்பிய பின்னரும் கொள்முதல் விலையை உயர்த்தவில்லை

இந்நிலையில் பன்னாட்டு தனியார் பால் நிறுவனம் தவிர்க்க முடியாத காரணம் என்கிற புதுவிதமான காரணத்தைக் கூறி நேற்று முதல் லிட்டருக்கு ரூ.4 விற்பனை விலையை உயர்த்தியுள்ளது. இந்நிறுவனத்தின் விற்பனை விலை உயர்வு தடுத்து நிறுத்தப்படாவிட்டால் ஒவ்வொரு நிறுவனங்களாக பால் விற்பனை விலையை உயர்த்தும் அபாயம் உள்ளது. அதுமட்டுமின்றி ஒயிட் கோல்டு என்கிற பெயரில் கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட எருமைப் பாலினை லிட்டர் ரூ.70 என வரும் 25ம் தேதி முதல் அறிமுகம் செய்ய இருப்பதாக சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே உள்ள கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் விற்பனை விலை ரூ.64 என்கிற நிலையில் அதே அளவு கொழுப்பு மற்றும் திடசத்து உள்ள பாலினை பெயரை மாற்றி ரூ.70 என்பது மறைமுக விலை உயர்வாகும். மக்கள் நலன் மீதும், பால் உற்பத்தியாளர்கள் நலன் மீதும் கிஞ்சித்தும் அக்கறை இன்றி செயல்படும் தனியார் பால் நிறுவனங்களின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தமிழக அரசு இனியாவது தனியார் பால் நிறுவனங்களை வரன்முறைப்படுத்தவும், பால் விற்பனை விலையை கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>