மீன் வளர்க்க பண்ணை தொட்டி அமைப்பது உட்பட 10 பணிகளுக்கு மீன்வளத்துறையில் டெண்டர் விட்டதில் விதிமுறை மீறல்

* 40 நாட்களாகியும் திறக்கப்படாமல் இருப்பதன் மர்மம்   

* கான்ட்ராக்டர்கள் பகீர் குற்றச்சாட்டு

சென்னை: மீன்களை வளர்க்க பண்ணை தொட்டி அமைப்பது உட்பட 10 பணிகளுக்கு மீன்வளத்துறையில் டெண்டர் விட்டதில் விதிமுறை மீறல் நடந்து இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மீன்வளத்துறை சார்பில் மதுரை மாவட்டம் சாத்தையாறு அணை, நெல்லை மாவட்டம் கடனாநதி அணை அருகே மீன் விதை பண்ணை அமைப்பது, செங்கல்பட்டில் மீன் விதை பண்ணைகளை நவீனப்படுத்துவது, கடலூர், திருச்சி மாவட்டத்தில் மீன்வளத்துறை துணை இயக்குநர், உதவி இயக்குநர்.  பயிற்சி நிலையத்துடன் கூடிய ஒருங்கிணைந்த அலுவலகம் உட்பட 10 பணிகளுக்கு ரூ.35 கோடியில் டெண்டர் அறிவிப்பு கடந்த நவம்பரில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து, கடந்த டிசம்பர் 11ம் தேதி மாலை 3.30 மணியளவில் டெண்டர் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது.  இப்பணிகளுக்கு கான்ட்ராக்டர்கள் பலர் விண்ணப்பித்திருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் அன்று மாலையே ஒப்பந்ததாரர்கள் முன்னிலையில் டெண்டர் திறக்கப்பட வேண்டும். தொடர்ந்து, நிர்ணயம் செய்யப்பட்டதை விட குறைந்த ஒப்பந்தபுள்ளி கோரும் ஒப்பந்த நிறுவனத்தை  தேர்வு செய்ய வேண்டும் என்பது தான் விதி. ஆனால், மீன்வளத்துறை சார்பில் அன்றைய தினத்தில் டெண்டர் திறக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதற்கு கான்ட்ராக்டர்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இது தொடர்பாக புகாரும் அளித்தனர். இந்த நிலையில் திடீரென கான்ட்ராக்டர்கள் சிலரை இப்பணியில் கலந்து கொள்ள தகுதியில்லை எனக்கூறி அவர்களது விண்ணப்பத்தை நிராகரித்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த 23,24ம் தேதிகளில் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி டெண்டர் திறக்க மீன்வளத்துறை முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தகவல் வந்த நிலையில், கான்ட்ராக்டர் பலர் குவிந்தனர்.

மேலும், எங்கள் முன்னிலையில் தான் ஒப்பந்த பெட்டியை திறக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதையடுத்து மீண்டும் ஒப்பந்த பெட்டி திறக்கப்படவில்லை. இந்த நிலையில், டெண்டர் திறக்க காலஅவகாசம் முடிந்து 40 நாட்களுக்கு மேலான நிலையில் தற்போது வரை திறக்கப்படவில்லை. மாறாக, ஒப்பந்த நிறுவனங்களை சட்ட விரோதமாக தேர்வு செய்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து கான்ட்ராக்டர்கள் சிலர் கூறுகையில், ‘ஒப்பந்த விதிகளின் படி டெண்டர் எடுக்க விரும்பும் ஒப்பந்த நிறுவனங்கள் தகுதியானவையா என்பதை மட்டும் பார்க்க வேண்டும். ஆனால், மீன்வளத்துறை சார்பில் மீன் பண்ணை ஏற்கனவே அமைத்து இருந்தால் மட்டுமே எடுக்க முடியும் என்று கூறியுள்ளது. மேலும், ஒப்பந்த விதிப்படி டெண்டர் இறுதி நாளில் அறிவிக்கப்பட்டவாறு திறக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 40 நாட்களுக்கு மேலாகியும் திறக்கப்படவில்லை. இதனால், டெண்டரில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்புள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

* மீன்வளத்துறையில் 10 பணிகளுக்கு ரூ.35 கோடியில் டெண்டர் அறிவிப்பு கடந்த நவம்பரில் வெளியிடப்பட்டது.

* டிசம்பர் 11ம் தேதி மாலை 3.30 மணியளவில் டெண்டர் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது.

Related Stories:

>