×

நாளை மறுநாள் குடியரசு தின விழா கொண்டாட்டம் சென்னையில் கவர்னர் தேசியக்கொடி ஏற்றுகிறார்: பொதுமக்கள், பள்ளி குழந்தைகளுக்கு அனுமதி இல்லை

சென்னை: நாடு முழுவதும் குடியரசு நாள் விழா 26ம் தேதி (நாளை மறுதினம்) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லியில் ஜனாதிபதி தேசியக்கொடி ஏற்றி வைப்பார். தமிழகத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தேசியக்கொடி ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்வார். இதற்காக, மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகே சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நாளை மறுதினம் (செவ்வாய்) காலை 8 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் தேசியக் கொடி ஏற்றி வைப்பார்.  இதைத்தொடர்ந்து ராணுவ வீரர்கள் மற்றும் தமிழக காவல் துறையின் அணி வகுப்பு நிகழ்ச்சி நடைபெறும்.

முதலமைச்சரின் வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கங்கள், கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம், காந்தியடிகள் காவலர் பதக்கங்கள், அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கான வேளாண்மை துறையின் சிறப்பு விருதுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்குவார். பின்னர், பதக்கம், பாராட்டு சான்றிதழ் பெற்றவர்கள் அனைவரும் கவர்னர், முதல்வருடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள். சுமார் 30 நிமிடம் நேரம் நடைபெறும் நிகழ்ச்சி முடிந்ததும், கவர்னர், முதல்வர் ஆகியோர் அங்கிருந்து விடைபெற்று செல்வார்கள்.வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா நிகழ்ச்சியின்போது பள்ளி மாணவ - மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.

இந்த கலைநிகழ்ச்சிகளை பார்க்கவும், கவர்னர் தேசியக்கொடி ஏற்றி வைக்கும் நிகழ்ச்சி மற்றும் ஹெலிகாப்டர் மலர் தூவும் நிகழ்ச்சியை பார்க்க ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மாணவ - மாணவிகள், குழந்தைகள் மெரினா கடற்கரை அமைந்துள்ள காமராஜர் சாலையின் இரண்டு பக்கமும் கூடி பார்வையிடுவார்கள். ஆனால், இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பள்ளி மாணவ - மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று பொதுமக்கள், மாணவர்கள் குடியரசு தின நிகழ்ச்சியை நேரில் பார்க்க வர வேண்டாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் பள்ளி மாணவ - மாணவிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

அதேநேரம், ராணுவ படை பிரிவு, வான் படை, கடலோர காவல் படை, சிபிஆர்எப், ஆர்பிஎப், தமிழ்நாடு சிறப்பு காவல், தமிழ்நாடு கமாண்டோ ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு, வனத்துறை, தீயணைப்பு துறை, ஊர்க்காவல் படை, தேசிய சாரணர் படை உள்ளிட்ட வீரர்களின் கண்கவர்அணிவகுப்பும், செய்தித்துறை, காவல் துறை, கூட்டுறவு துறை, வேளாண்மை துறை, சுற்றுலா துறை உள்ளிட்ட 25 துறை சார்பில் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

குடியரசு தின விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நீதிபதிகள், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். வழக்கமாக குடியரசு தினத்தன்று மாலை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள், விஐபிக்களுக்கு விருந்து அளித்து கவுரவிப்பார். கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு விருந்து நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் குடியரசு தின விழா கொண்டாட்டத்தையொட்டி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags : Governor ,Public ,Republic Day ,Chennai ,children ,school , Governor approaches National Flag in Chennai for Republic Day celebrations the next day: Public and school children are not allowed
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...