×

இன்டர்நெட் சேவையை வேகப்படுத்தாவிட்டால் தமிழக அரசிடம் பயோமெட்ரிக் மிஷினை திரும்ப ஒப்படைக்க முடிவு: ரேஷன் கடை ஊழியர்கள் எச்சரிக்கை

சென்னை: இன்டர்நெட் சேவையை வேகப்படுத்தாவிட்டால் பயோமெட்ரிக் மிஷினை தமிழக அரசிடம் திரும்ப ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக ரேஷன் கடை ஊழியர்கள் எச்சரித்துள்ளனர். கூட்டுறவு ரேஷன் கடை பணியாளர்களின் பிரச்னைகள் குறித்து டியுசிஎஸ் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ராஜன் சாமிநாதன், ராஜசேகர் (எல்பிஎப்), அன்பழகன், ஆனந்த் (ஐஎன்டியுசி), கவியரசன், விஜய்ஆனந்த் (ஜெஎம்எஸ்) நிர்வாகிகள் நேற்று உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையரை சென்னை, எழிலகத்தில் சந்தித்து மனு அளித்தனர்.

அதில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளில் குறைந்த சம்பளத்தில் பணி செய்து வருவது கூட்டுறவு ரேஷன் கடை பணியாளர்கள்தான். கொரோனா பேரிடர் மட்டுமல்ல, புயல், மழை வெள்ளத்திலும், பண்டிகை காலங்களிலும் தமிழக அரசு அறிவிக்கும் நலத்திட்டங்களை அடிதட்டு மக்கள் வரை சென்றடைய அர்ப்பணிப்புடன் பணி செய்து வருகிறோம். ஆனால் பல ஆண்டுகளாக எங்களது சம்பள உயர்வு கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது. அதுபற்றி உடனடியாக அரசு பரிசீலித்து, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசு தற்போது அறிமுகப்படுத்தியுள்ள பயோமெட்ரிக் முறையில் பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் சர்வர் கோளாறு காரணமாக விரைவாக பொருட்கள் வழங்க முடியவில்லை. இதனால் பொதுமக்களுக்கும், ரேஷன் கடை ஊழியர்களுக்கும் பிரச்னைகள் ஏற்படுகிறது. அதனால் இணையதள சேவையின் தரத்தை உயர்த்தி வழங்க வேண்டும். அல்லது பயோமெட்ரிக் முறையை நிறுத்தி வைக்க வேண்டும். தற்போது, பொதுமக்களிடம் பிரச்னை ஏற்படாமல் இருக்க ஒவ்வொரு ரேஷன் கடைக்காரர்களும் தங்களது செல்போனில் இருந்து வைபை தொடர்பை வைத்துதான் பொருட்கள் வழங்கி வருகிறோம். இதற்காக ஊழியர்களுக்கு மாதம் ரூ.500 வழங்க வேண்டும்.

ரேஷன் கடைகளில் கட்டுப்பாட்டு பொருட்கள் அதிகளவில் தேங்கியுள்ளது. அதனால் தேவையில்லாத பொருட்களை கொள்முதல் செய்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைப்பதை தவிர்க்க வேண்டும். 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் வழங்கிய கொண்டைக்கடலை விற்பனை போக மீதம் உள்ள இருப்பை கெட்டு போவதற்கு முன் திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். பயோமெட்ரிக் நடைமுறையில் உள்ள நிலையில், பழைய நடைமுறையில் இருந்த பில்போடும் மிஷின் (பிஓஎஸ்) கருவியில் 2020ம் ஆண்டு முதல் நிலுவை கணக்குகளை நீக்க வேண்டும். கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு எடை குறைவாகத்தான் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்கு சரியான தீர்வு காண வேண்டும். விடுமுறை நாட்களில் பணி செய்யும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு மாற்று விடுமுறை அல்லது அதற்கு உண்டான ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பின்னர் தொழிற்சங்க நிர்வாகிகள் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘அரசு பயோமெட்ரிக் மூலம் ரேஷன் பொருட்கள் வழங்க உத்தரவிட்டுள்ளது. சர்வர் கோளாறு காரணமாக தினசரி 20 முதல் 30 பேருக்கு மட்டுமே உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது. இன்டர்நெட் சேவையை வேகப்படுத்த வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. இதனால் ரேஷன் கடை ஊழியர்கள் மனஉளைச்சல் அடைந்துள்ளனர். அரசு எங்கள் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்காவிட்டால், பயோமெட்ரிக் மிஷினை  உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் அலுவலகத்தில் திரும்ப ஒப்படைக்க முடிவு செய்துள்ளோம்” என்றனர்.

* சர்வர் கோளாறு காரணமாக தினசரி
20 முதல் 30 பேருக்கு மட்டுமே உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது. இன்டர்நெட் சேவையை வேகப்படுத்த வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.

Tags : Government ,Tamil Nadu ,Ration shop staff , Government of Tamil Nadu decides to return biometric machine if internet service is not expedited: Ration shop staff warn
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...