பல நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி உதவி உண்மை நண்பன் இந்தியா: குவியும் பாராட்டு

வாஷிங்டன்: உலக நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை வழங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும், உலக சுகாதார அமைப்பும் பாராட்டு தெரிவித்துள்ளன. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை கடந்த 16ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய மோடி, `உலகின் மருந்தகம்’ என்று அறியப்படும் இந்தியா, கொரோனாவை எதிர்த்து போரிட உலக நாடுகளுக்கு உதவும் என்று கூறினார். கடந்த சில நாட்களாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசிகள், பூடான், மாலத்தீவுகள், நேபாளம், வங்கதேசம் ஆகிய சார்க் நாடுகளுக்கும், மியான்மர், மொரிஷியஸ் மற்றும் சிஷெல்ஸ் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு உதவியாக வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர, சவுதி அரேபியா, தென் ஆப்ரிக்கா, பிரேசில் மற்றும் மொராக்கோ உள்ளிட்ட நாடுகளுக்கு வர்த்தக ரீதியாகவும் அனுப்பப்படுகிறது.

இந்நிலையில், தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்க உள்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘உலக சுகாதாரத்துக்காக தெற்கு ஆசிய நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் இந்தியாவின் செயல் பாராட்டுக்குரியது. மாலத்தீவு, பூடான், வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளுக்கு இலவசமாகவும் வழங்கி உள்ளது. விரைவில் இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பிற நாடுகளுக்கும் தடுப்பூசி அனுப்பும் பணி விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. தனது மருந்து துறையின் மூலம் உலக சமுதாயத்துக்கு இந்தியா உண்மையான நண்பனாக உதவுகிறது,’ என்று கூறப்பட்டுள்ளது. இதேபோல், உலக சுகாதார அமைப்பும், பல்வேறு நாடுகளும் பாராட்டியுள்ளது.

Related Stories:

>