இப்படி ஒரு வரவேற்பை நாங்களே எதிர்பார்க்கவில்லை... நடராஜனின் தந்தை நெகிழ்ச்சி

சேலம்: என் மகனை வரவேற்க இவ்வளவு பேர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை என்று கிரிக்கெட் வீரர் நடராஜனின் தந்தை தங்கராஜ் தெரிவித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் இந்திய அணியில் அறிமுகமாகி சிறப்பாக செயல்பட்டு முத்திரை பதித்தார் தமிழகத்தை சேர்ந்த ‘யார்க்கர் கிங்’ நடராஜன். நாடு திரும்பிய அவரை வரவேற்க, சொந்த ஊரான சேலம்  சின்னப்பம்பட்டியில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சிறப்பான  ஏற்பாடுகளை செய்து இருந்தனர். சின்னப்பம்பட்டிக்கு வந்த நடராஜனுக்கு ஊர் மக்கள், கிரிக்கெட் ரசிகர்கள், இளைஞர்கள், பெண்கள் என பல்வேறு தரப்பினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். ரசிகர்கள், இளைஞர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். ஊர் நுழைவு வாயிலில் இருந்து நடராஜன் படித்த பள்ளி வரை சாரட் வண்டியில் அழைத்து செல்லப்பட்டார். வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இது குறித்து நடராஜனின் தந்தை தங்கராஜ் கூறியதாவது: நடராஜனின் சகோதரி வீட்டுக்காரர் பெங்களூரிலிருந்து நடராஜனை அழைத்து வந்தார். நண்பர்கள் சின்னப்பம்பட்டியிலிருந்து வீடுவரை வரவேற்பு வழங்கினர். அதன் பின்பு சின்னப்பம்பட்டி பள்ளி அருகில் உள்ள எங்களது இடத்தில் சின்ன மேடையில் வரவேற்பை ஏற்றுக்கொண்டு நடராஜன் பேசும் வகையில் ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால் நடராஜன் வெளிநாட்டிலிருந்து விமானம் மூலம் பயணித்து வந்ததால் கொரோனா அச்சம் காரணமாக பொதுவெளியில் அதிகம் கூட்டம் சேர்க்கக்கூடாது, மேடை வேண்டாம் என்று சுகாதாரத் துறையினர் சொன்னதால் அதை எடுத்துவிட்டோம். நடராஜனை வரவேற்க இவ்வளவு பேர் திரண்டு வந்திருந்தது எங்களுக்கே ஆச்சர்யமாக இருந்தது. இவ்வாறு தங்கராஜ் கூறினார்.

கொரோனா இல்லை: நடராஜனுக்கான வரவேற்பு ஏற்பாடுகள் குறித்து தகவலறிந்த சுகாதாரத்துறையினர், கொரோனா கட்டுப்பாடுகளை காரணம் காட்டி வரவேற்பு மேடையை அகற்றினர். மேலும், சால்வை, பூங்கொத்து வழங்க தடை விதித்தனர். இருந்தபோதிலும், ஆயிரக்கணக்காண ரசிகர்கள் திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அன்றைய தினம் தாரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக்குழுவினர், நடராஜன் வீட்டிற்கு வந்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். சேலம் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்து பார்த்ததில், நேற்று அவருக்கு கொரோனா நெகட்டிவ் என ரிசல்ட் வந்ததாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>