×

ஜேஇஇ மெயின் தேர்வை போன்று ஆண்டுக்கு 2 முறை ‘நீட்’ தேர்வு?.. நாளை மறுநாள் அதிகாரிகள் குழு ஆலோசனை

புதுடெல்லி: ஜேஇஇ மெயின் தேர்வை ேபான்று ஒவ்வொரு ஆண்டும் ஆண்டுக்கு இருமுறை ‘நீட்’ தேர்வு நடத்துவது குறித்து நாளை மறுநாள் மூத்த அதிகாரிகள் குழு ஆலோசனை நடத்துகிறது. நாடு முழுவதும் எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கு ‘நீட்’ எனப்படும் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் இத்தேர்வை வரும் ஆண்டுகளில் ஆண்டுக்கு இருமுறை நடத்துவது குறித்து தேசியத் தேர்வுகள் முகமை ஆலோசித்து வருகிறது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு ேதசிய ேதர்வுகள் முகமை சமீபத்தில் கடிதம் எழுதியுள்ளது.

இதுகுறித்து தேசிய தேர்வுகள் முகமை அதிகாரிகள் கூறுகையில், ‘கடுமையான போட்டித் தேர்வு என்பதால், இத்தேர்வை ஆண்டுக்கு இரு முறை நடத்தினால், மாணவர்களுக்கு மன அழுத்தம் குறையும். இதற்கு மத்திய சுகாதார அமைச்சகத்தின் அனுமதி தேவை என்பதால், சில ஆலோசனைகளை முன்னிருத்தி கடிதம் எழுதப்பட்டுள்ளது. தற்போது காகித முறையில் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. இதை ஆண்டுக்கு இரண்டு முறை என்று நடத்தும்போது ஏராளமான ஏற்பாடுகளைக் கூடுதலாகச் செய்ய வேண்டி இருக்கும். இதனால் ஆன்லைனில் ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வை நடத்தும் ஆலோசனை பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இந்தாண்டு நீட் தேர்வு நடத்தும் முறைகள் குறித்து விவாதிக்க மத்திய சுகாதார, கல்வி அமைச்சகம் மற்றும் தேசிய தேர்வு முகமை மூத்த அதிகாரிகளின் கூட்டம் வரும் 25ம் தேதி (நாளை மறுநாள்) நடக்கிறது. அப்போது, நீட் - 2021ஐ ஆன்லைனில் நடத்துவதற்கான சாத்தியம் மற்றும் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்துவது குறித்து விவாதிக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் 16 லட்சம் பேர் நீட் ேதர்வை எழுதுகின்றனர். இந்தாண்டு ஜேஇஇ (மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்பில் ேசர்வதற்கான பொது நுழைவு தேர்வு) மெயின் 2021 தேர்வு ஆண்டுக்கு 4 முறை நடைபெறும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக பிப்ரவரி மாதம் 23 முதல் 26ம் தேதி  வரை தேர்வு நடைபெற உள்ளது.

அதைத் தொடர்ந்து மார்ச், ஏப்ரல் மற்றும் மே  மாதங்களிலும் ஜேஇஇ மெயின் 2021 தேர்வு நடைபெற உள்ளது. அதனால், ஜேஇஇ தேர்வு போல், நீட் தேர்வையும் ஆண்டுக்கு 4 முறை என்றில்லாமல் 2 முறையாவது நடத்த வலியுறுத்தப்படும். நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவர் மீண்டும் தேர்வெழுத ஓராண்டு காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், அவரது எதிர்கால உயர்கல்வி படிப்பில் தாமதம் ஏற்படுகிறது. மேலும், மாணவனின் ஒரு கல்வி ஆண்டே வீணாகிறது. ஆன்லைன் தேர்வு முறை உலகெங்கிலும் சாத்தியப்பட்டு வருவதால், நீட் தேர்வும் ஆன்லைனில் கொண்டு வரப்படலாம்’ என்றனர்.


Tags : 2 times a year ‘Need’ exam like JEE Main exam?
× RELATED மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க...