மத்தியில் உள்ள அரசாங்கம் தமிழ்மொழியை மதிப்பதில்லை; தமிழகத்தில் உள்ள அரசாங்கம் எந்த சமரசத்துக்கு தயாராக உள்ளது: ராகுல்காந்தி பேச்சு

கோவை: மத்தியில் உள்ள அரசாங்கம் தமிழ்மொழியை மதிப்பதில்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். ராகுலின் தமிழ் வணக்கம் என்ற பெயரில் பரப்புரை மேற்கொள்ள 3 நாள் சுற்றுப்பயணமாக காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி, தமிழகம் வந்துள்ளார். கோவை விமான நிலையம் வந்த ராகுல் காந்திற்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து பிரச்சார வாகனத்தில் இருந்தப்படி தொண்டர்கள் மத்தியில் பரப்புரை செய்த ராகுல் காந்தி கோவையின் பல பகுதிகளுக்கு சென்று பரப்புரை செய்து வருகிறார்.

அப்போது பேசிய அவர்; என்னுடைய மன் கி பாத்தை சொல்ல வரவில்லை; மக்களின் மன் கி பாத்தை கேட்க வந்துள்ளேன். பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, கொரோனாவை கையாண்ட விதத்தால் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. தமிழக மக்கள் எதிர்பார்ப்பது சுயமரியாதையை மட்டும் தான்; ஒரே மொழி ஒரே கலாச்சாரத்தை முன்னிறுத்த பிரதமர் முயற்சிக்கிறார். தமிழகத்தில் உள்ள அரசாங்கம் எந்த சமரசத்துக்கு தயாராக உள்ளது. நரேந்திர மோடி எண்ணுவதை போல தமிழகர்களை விலைக்கு வாங்க முடியாது. தொழில்கள் நிறைந்த கோயம்புத்தூர், ஜிஎஸ்டியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; நாட்டின் அமைப்பு முறையில் தமிழ், இந்தி, பெங்காலி போன்ற அனைத்து விதமான மொழிகளும் உள்ளன. அனைத்து மொழிகளுக்கும் சமமான உரிமை இருக்கிறது என நாங்கள் நம்புகிறோம்.

நமக்கும் பிரதமர் மோடிக்கும் உள்ள முக்கிய வேறுபாடு இதுதான். நாட்டின் பெரிய தொழில் அதிபர்களாக உள்ள தனது சில நண்பர்களின் வாழ்க்கைக்காக மோடி பாடுபடுகிறார் பிரதமர் மோடி. அவர் இந்திய மக்களுடைய மற்றும் தமிழக மக்களுடைய உரிமை எல்லாவற்றையும் விற்க தயாராகி வருகிறார். விவசாயிகளின் உரிமைகளை 3 புதிய வேளாண் சட்டங்கள் மூலமாக பறிக்கிறார். இந்தியாவில் உள்ள விவசாயிகளை மாபெரும் தொழிலதிபர்களுக்கு வேலைக்காரர்களாக மாற்றுகிறார். அதனால்தான் நாங்கள் பா.ஜ.வை எதிர்க்கிறோம், விவசாயிகள் பக்கம் நிற்கிறோம்.

இந்தியாவில் தமிழ்நாடுதான் எந்த ஒரு மாற்றத்திற்கும் முன் உதாரணமாக இருக்கிறது என்பதை உறுதியாக நம்புகிறேன். தமிழக இளைஞர்கள் துரதிர்ஷ்டவசமாக வேலைவாய்ப்பு பெற முடியாமல் இருக்கின்றனர். அதேபோல், தமிழக விவசாயிகளும் சிரமப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். அதனால்தான் தமிழக மக்கள் புதிய வாழ்க்கை முறையும், புதிய அரசாங்கத்தையும் விரும்பிக்கொண்டிருக்கின்றனர். சிறு, குறு தொழில் செய்பவர்களின் சிரமத்தை புரிந்து கொள்வதற்காக நான் இங்கே வந்துள்ளேன். சிறு, குறு தொழில் செய்பவர்கள், விவசாயிகள், மாணவர்கள் அவர்களின் பிரச்சனை என்ன எவ்வாறு சரிசெய்ய முடியும் என்பதை தெரிந்துகொள்ள வந்திருக்கிறேன்.

தமிழக மக்களுடன் அரசியல் உறவு மட்டுமல்ல குடும்ப உறவு ரத்த உறவும் இருக்கிறது. அதற்காகதான் உங்களுக்காக தியாகம் செய்வதற்காக நான் வந்திருக்கிறேன். நான் எந்தவித சுயநலத்திற்காகவும் வரவில்லை நான் வந்தது உங்களோடு உறவாடுவதற்காக, உங்களை முன்னேற்றுவதற்காக வந்துள்ளேன். எனக்கு சுயலாபம் கிடையாது எனவும் கூறினார்.

Related Stories:

>