காங். சமாதான முயற்சி தோல்வி ஜேபி நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைகிறார் அமைச்சர் நமச்சிவாயம்: எம்எல்ஏக்களுக்கு குறி

புதுச்சேரி: அமைச்சர் நமச்சிவாயத்தை சமாதானப்படுத்தும் காங்கிரஸ் கட்சியின் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. அவர் பாஜகவில் இணைந்து தனது அரசியல் பயணத்தை துவக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது. புதுச்சேரியில் கடந்த 2016ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த நமச்சிவாயத்தை முன்னிறுத்தி காங்கிரஸ் கட்சி தேர்தலை சந்தித்தது. அப்போது நடந்த தேர்தலில் 15 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் ஆட்சியமைத்தது. நமச்சிவாயம் முதல்வராவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாராயணசாமியை அப்பதவிக்கு கட்சி தலைமை தேர்வு செய்தது.  இதனால் அதிருப்தியடைந்த நமச்சிவாயத்தை மேலிடப்பொறுப்பாளர் சின்னாரெட்டி அவரது இல்லத்துக்கு சென்று சமாதானப்படுத்தினார்.   இருப்பினும் நாராயணசாமியும்- நமச்சிவாயமும் பல இடங்களில் மறைமுகமாக முட்டிக்கொண்டனர்.

இருவருக்குமான கருத்து வேறுபாடுகள் நாளடைவில் பெரும் இடைவெளியை ஏற்படுத்தியது. இதனை பொது இடங்களில் வெளிக்காட்டவில்லை. அடிக்கடி ஏற்படும் மன

கசப்புகளை மேலிடப்பொறுப்பாளர் முகுல்வாஸ்னிக், சஞ்சய் தத் ஆகியோர் தலையிட்டு சமாதானம் செய்து வைத்தனர்.  இதில் கடந்த மார்ச் மாதம் நமச்சிவாயத்தின் கட்சி தலைவர் பதவியும் பறிக்கப்பட்டது.  எதிர்காலத்தில் கட்சியில் தான் முன்னிலைப்படுத்துவதை தடுக்கும் வகையில் தலைவர் பதவியில் இருந்து நீக்கியதாக நமச்சிவாயம் கருதினார்.  இதனால் முன்பு போல கட்சியின் செயல்பாடுகளில் தீவிரம் காட்டாமல், அவ்வப்போது நடக்கும் விழாக்களுக்கு மட்டும் தலைகாட்டினார்.  தான் கட்சியில் இருந்து கட்டம் கட்டப்படுவது குறித்து காங்கிரசின் முக்கிய நிர்வாகிகளிடம் தனது வேதனையை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் பகிரங்கமாக கட்சி, ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து   புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இவ்விஷயத்தில்  மேலிடப்பொறுப்பாளர்களால் எவ்வித உறுதி மொழியும் நமச்சிவாயத்துக்கு  அளிக்காமல், இணைந்து செயல்படுங்கள் என்று மட்டும் தெரிவித்துள்ளனர். இப்படிப்பட்ட சூழலில் வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியோடு பயணித்தால், அரசியல் வாழ்க்கைக்கு பெரும் பின்னடைவு ஏற்படுமென கருதி மாற்றுப்பாதையை தேர்வு செய்ய நமச்சிவாயம்  திட்டமிட்டுள்ளார் இதனை தனக்கு சாதகமாக்கிக்கொண்ட பாஜக தலைமை, நமச்சிவாயத்தையும், அவருடன் சில எம்எல்ஏக்களையும் குறிவைத்து ஆப்ரேஷன் லோட்டஸ் என்ற பெயரில்  புதுச்சேரி அரசியல் விளையாட்டை ஆடத் துவங்கியிருக்கிறது. அதன்படி ஜேபி நட்டா வரும் 29ம் தேதி தமிழகம் வருகிறார்.   30ம் தேதி புதுச்சேரியில் முகாமிடுகிறார். அப்போது காங்கிரஸ் மற்றும் என். ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள், தற்போதைய எம்எல்ஏக்கள் அவரை சந்தித்து முறைப்படி கட்சியில் இணையவுள்ளனர்.  

இதில் நமச்சிவாயமும் இடம் பெறுவார் என உறுதியான  தகவல் பரவி வருகிறது. பாஜகவில் சேருவதை தடுக்கும் வகையில் காங்கிரஸ் மேலிடப்பொறுப்பாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துவிட்டதாக காங்கிரஸ்காரர்களே தெரிவிக்கின்றனர். பாஜகவில் இணைந்து அரசியல் பயணத்தை துவக்குவதை தவிர அவருக்கு வேறுவழியில்லை. அதற்கு முன்னதாக அமைச்சர், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளார். இதெல்லாம் இன்னும் சில தினங்களில் படிப்படியாக நடைபெறலாம்.  வரும் தேர்தலையொட்டி புதுச்சேரி அரசியலின் ஒவ்வொரு நகர்விலும் பல்வேறு திருப்பங்கள் இருக்கலாம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

Related Stories: