×

கந்திலி அருகே கிராமத்தில் சிறுத்தை நடமாட்டாத்தால் மக்கள் பீதி: வனத்துறை முகாமிட்டு கண்காணிப்பு

திருப்பத்தூர்:  கந்திலி அருகே மர்ம விலங்கு தாக்கியதால் 4 ஆடுகள் நேற்று உயிரிழந்தன. இதனால் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். எனவே வனத்துறையினர் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொட்டாவூர் அடுத்த அனிகானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர்(55), விவசாயி. இவர் தனது விவசாய நிலத்தையொட்டி வீடுகட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார். விவசாயத்தொழிலுடன் கால் நடைகளையும்  வளர்த்து வருகிறார்.இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை மேய்ச்சலுக்கு சென்ற 6 ஆடுகளை ஓட்டி வந்து கொட்டகையில் அடைத்தார். நேற்று மாலை ஆட்டுக்கொட்டகைக்கு ஜெய்சங்கர் வந்து பார்த்தபோது, 6 ஆடுகளில் 4 ஆடுகள் மர்ம விலங்கு தாக்கியதில் உயிரிழந்து கிடந்தன. ஆட்டின் உடல் முழுவதும் விலங்கின் நகக்கீறல்கள் காணப்பட்டன. கழுத்துப்பகுதியிலும், வயிற்றுப்பகுதியில் மர்ம விலங்கின் பற்கள் பதிந்துள்ளது தெரியவந்தது.

ஆட்டுக்கொட்டகைக்கு செல்லும் பாதையில் மர்ம விலங்கின் கால் தடம் இருப்பதை பார்த்த ஜெய்சங்கர் அலறி கூச்சலிட்டார். உடனே, அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தெரிவித்தனர். மேலும், ஜெய்சங்கரின் ஆட்டுக்கொட்டகையில் நுழைந்து ஆடுகளை வேட்டையாடியது சிறுத்தை தான் என ஊர் பொதுமக்கள் தெரிவித்தனர். உடனே, திருப்பத்தூர் வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர்.அதன்பேரில், அங்கு வந்த வனத்துறையினர் கிராம மக்களிடம் விசாரணை நடத்தினர். பிறகு, கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். மர்ம விலங்கால் உயிரிழந்த ஆடுகளின் உடல் உறுப்பில் சிலவற்றை ஆய்வுக்காக மருத்துவர்கள் எடுத்துச்சென்றனர்.

இதையடுத்து, கந்திலி பகுதியையொட்டியுள்ள மலைப்பகுதியில் இருந்தும், கிருஷ்ணகிரி வனப்பகுதியில் இருந்தும் அவ்வப்போது மர்ம விலங்கு ஊருக்குள் நுழைந்து கால்நடைகளை வேட்டையாடி வருவதால், வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டுள்ளனர். இதனால், அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.



Tags : village ,camp camp monitoring ,Kandili ,Forest , People panic over leopard movement in village near Kandili: Forest camp camp monitoring
× RELATED கல் குவாரி திட்ட கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைப்பு