×

நாமக்கல்லில் 24 மணி நேரமும் கிடைக்கிறது...‘சந்து கடை’ மது விற்பனையால் பார் உரிமையாளர்கள் புலம்பல்

நாமக்கல்: நாமக்கல் பகுதியில் சந்து கடைகளில் மது விற்பனை ஜோராக நடைபெறுவதால், டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் புலம்பி வருகின்றனர்.நாமக்கல் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் பார்களில் 24 மணி நேரமும் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதை கண்டுகொள்ளாமல் இருக்க உள்ளூர் போலீசார், மதுவிலக்கு போலீசார், போலீஸ் உயரதிகாரிகள், டாஸ்மாக் அதிகாரிகள் ஆகியோர் புரோக்கர்கள் மூலம் மாதம்தோறும் கவனிக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு பாருக்கும் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை, பார் புரோக்கர்கள் மூலம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. காலையில் டீக்கடை திறக்கும் முன்பே பார்கள் திறக்கப்பட்டு விடுகிறது. இங்கு குவார்ட்டரை இரண்டாக பிரித்து கட்டிங்(மதுபானம்) விற்பனை செய்யப்படுகிறது. டாஸ்மாக் கடைகளை விட 2 மடங்கு விலை அதிகமாக பார்களில் விற்பனை செய்யப்படுகிறது.

இவ்வாறு 24 மணி நேரம் செயல்படும் டாஸ்மாக் பார்களால், பெண்கள் சாலையில் நிம்மதியாக நடந்து செல்லமுடியாத நிலை உள்ளது. போதை நபர்களின் அட்டகாசம் மாவட்டம் முழுவதும் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கோரி, பல்வேறு அமைப்புகள் கலெக்டர் அலுவலகம், எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தன. இதன் எதிரொலியாக மதுவிலக்கு ஏடிஎஸ்பி ராமு உத்தரவின்படி, மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் பார்களில் மதுவிலக்கு போலீசார் திடீர் ரெய்டு நடத்தினர். அப்போது, ஒரு சில சரக்கு பாட்டில்களை பறிமுதல் செய்து, பெயரளவுக்கு வழக்கு போட்டுள்ளனர். டாஸ்மாக் மதுக்கடை திறக்கும் முன்பு விற்பனை செய்யக்கூடாது.

வெளியிடங்களில் வைத்து விற்பனை செய்து கொள்ளலாம் என புதிய வழியை காட்டியுள்ளனர்.தற்போது, மாவட்டம் முழுவதும் சந்து கடைகளில் தான் மதுபானங்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. அதை தடுக்காமல், டாஸ்மாக் நிர்வாகத்திடம் முறைப்படி லைசென்சு பெற்று நடத்தப்படும் பார் உரிமையாளர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பதாக, பார் உரிமையாளர்கள் குமுறுகிறார்கள். எனவே, சந்துக்கடை நடத்துபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பார் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : Namakkal ,Bar owners ,sale ,alley shop , In Namakkal Available 24 hours a day ... by selling ‘alley shop’ liquor Bar owners lament
× RELATED வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு அசோலா தீவன உற்பத்தி குறித்து செயல் விளக்கம்