×

டவுன் பள்ளியில் செயல்பட்ட கடைகள் நயினார்குளம் மார்க்கெட்டிற்கு மாற்றம்

நெல்லை: தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. போக்குவரத்து நிறுத்தப்பட்டதுடன் வணிக நிறுவனங்கள், கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. காய்கறி கடைகள், மெடிக்கல் ஆகியவை குறிப்பிட்ட நேரத்தில் திறந்திருக்க அரசு அனுமதி அளித்தது. இதில் காய்கறி கடைகள், பலசரக்கு கடைகள், இறைச்சி கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியதால் கொரோனா தொற்று பரவல் வேகம் எடுத்தது. இதையடுத்து காய்கறி கடைகள், இறைச்சி கடைகள். உழவர் சந்தைகளை பல்வேறு இடங்களில் மாற்றம் செய்து பொதுமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்தது. இதன்படி நெல்லை டவுன் நயினார்குளம் காய்கறி மார்க்கெட், டவுன் போஸ் மார்க்கெட், பாளை காந்தி மார்க்கெட் உள்ளிட்ட காய்கறி கடைகளை மாநகர பகுதியில் பல்வேறு பகுதிகளில் பிரித்து வைத்து குறிப்பிட்ட நேரத்தில் திறந்து மூட மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. நயினார்குளம் மொத்த காய்கறி மார்க்கெட் புதிய பஸ்நிலையம் பகுதியிலும், சில்லரை விற்பனை கடைகள் டவுன் சாப்டர் பள்ளி மைதானத்திலும் செயல்பட்டு வந்தன.

பின்னர் தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து பல்வேறு கட்ட தளர்வுகளுக்கு பின் புதிய பஸ்நிலையத்தில் செயல்பட்டுவந்த மொத்த காய்கறி மார்க்கெட், நயினார்குளம் மார்க்கெட்டிற்கு மாற்றப்பட்டன. ஆனால் சாப்டர் பள்ளியில் இயங்கி வந்த சில்லரை விற்பனை கடைகள் மட்டும், பொங்கல் பண்டிகை வரை அங்கேயே இயங்கியது. இந்நிலையில் கடந்த 19ம் தேதி முதல் பள்ளிகளில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்புகள் கொரோனா தடுப்பு நடவடிக்கை வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி துவங்கியுள்ளன. மாணவர்களும் ஆர்வத்துடன் பள்ளிக்கு வருகின்றனர்.

இதனால் டவுன் சாப்டர் பள்ளியில்  செயல்பட்டு வந்த நயினார்குளம் காய்கறி மார்க்கெட் சில்லரை விற்பனை கடைகளை நயினார்குளம் மார்க்கெட்டிற்கு மாற்றம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து அங்கு செயல்பட்டு வந்த 20க்கும் மேற்பட்ட கடைகள் நயினார்குளம் மார்க்கெட்டிற்கு வியாபாரிகள் மாற்றம் செய்தனர். இதையடுத்து பள்ளி மைதானத்தில் காய்கறி கடைகளின் குப்பைகள், குவிந்து கிடந்த காய்கறி கழிவுகளை ஜேசிபி இயந்திரம் மூலம் சுத்தப்படுத்தும் பணி நடந்தது. தற்போது காய்கறி கடைகள் காலி செய்யப்பட்டதால் சாப்டர் பள்ளி விளையாட்டு மைதானம் கடந்த 8 மாதங்களுக்கு பின் மாணவர்கள் விளையாடும் வகையில் தயார்படுத்தப்
பட்டுள்ளது.



Tags : Town School ,shops , Shops operating at the Town School Transfer to Nainarkulam Market
× RELATED அறந்தாங்கியில் நகை, பாத்திர கடைகளில் பயங்கர தீ