சாணார்பட்டி ஒன்றியத்தில் பூக்கள் உதிராமல் இருக்க மா மரங்களில் மருந்தடிப்பு: விளைச்சல் அதிகரிக்கும் என விவசாயிகள் நம்பிக்கை

கோபால்பட்டி: சாணார்பட்டி ஒன்றியத்தில் மா மரங்களில் பூத்துள்ள பூக்கள் உதிராமல் இருக்க, மருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்தாண்டு விளைச்சல் அதிகரிக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். சாணார்பட்டி ஒன்றியத்தில் உள்ள வேம்பார்பட்டி, அஞ்சுகுழிப்பட்டி, கோட்டை, தவசி மடை  கணவாய்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மாந்தோப்புகள் அதிகளவில் உள்ளன. இப்பகுதியில் விளையும் உயர்தர அல்போன்ஸா, பங்கனப்பள்ளி உள்ளிட்ட மாம்பழங்களை வெளி மாவட்டங்களுக்கும், வெள் மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர். இந்நிலையில், இந்தாண்டு காலம் தவ றிபெய்த மழையினால், முதலில் பூத்த பூக்கள் அனைத்தும் உதிர்ந்துவிட்டன. தற்போது இரவில் பனிப்பொழிந்து, பகலில் நல்ல வெயில் அடிப்பதால், மா மரங்கள் பூக்கத் தொடங்கியுள்ளன.

 இவைகள் உதிராமல் இருக்க, மாமரங்களுக்கு மருந்து அடிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்தாண்டு, மா விளைச்சல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இது குறித்து விவசாயி கபூர் கூறுகையில், ‘கடந்தாண்டு கொரோனா பாதிப்பால் ‘மாம்பழங்களை விற்பனை செய்ய முடியாமல், மா விவசாயிகள் கடும் பாதிப்பை சந்தித்தனர். இந்தாண்டு மழை நன்கு பெய்ததால், பூக்கள் அதிகமாக பூத்துள்ளன. இதனால், ‘மா’ விளைச்சல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது’ என்றார்.

Related Stories:

>