×

காலாவதியாகி பல ஆண்டுகளாச்சு தள்ளுவண்டியாக மாறிய விருதுநகர் அரசு பஸ்கள்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர்,சிவகாசி, சாத்தூர், காரியாபட்டி, அருப்புக்கோட்டை, திருவில்லிபுத்தூர், ராஜபாளையத்தில் இரண்டு என 8 அரசு போக்குவரத்து பணிமனைகள் உள்ளன. இவற்றில் 237 டவுன் பஸ்களும், 181 நீண்ட தூர பஸ்கள் என 418 பஸ்கள் இயக்கப்படுகின்றன.கடந்த 10 ஆண்டுகளில் நீண்ட தூரபஸ்கள் மட்டும் புதிதாக வாங்கப்பட்டுள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட டவுன் பஸ்களே இன்று வரை இயக்கப்படுகின்றன. அனைத்து டவுன் பஸ்களும் அனுமதிக்கப்பட்ட கால அளவு, பயணத்தூரத்தை கடந்து இயங்கி வருகின்றன. காலாவதியான பஸ்களை இயங்குவதால் பல டவுன் பஸ்கள் ஓட்டை, உடைசலாக காட்சி தருகின்றன. விருதுநகர் மாவட்ட அரசு பஸ்களில் மட்டும் பிற மாவட்டங்களை காட்டிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த நிலையிலும் கிராமங்களுக்கு இயக்கப்படும் பஸ்களில் பெரும்பான்மையானவை ஓட்டை, உடைசலாகவே உள்ளது. பல டவுன் பஸ்களின் இருக்கைகள் உடைந்த நிலையிலும், பக்கவாட்டு கண்ணாடிகள் இல்லாமலும் இயங்குகின்றன. மேற்கூரைகள், கண்ணாடிகள் ஓட்டையாக இருப்பதால் வெயில் அடித்தால் பயணிகள் மீது வெயில் விழுவதும், மழை பெய்தால் மழைநீர் ஒழுகுவதும் தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில் பல கிராம பஸ்கள் செல்லும் போது நடுவழியில் நின்று கொள்வதும், ஸ்டாட்டாக மறுக்கும் போது டிக்கெட் எடுத்த பயணிகளில் ஆண்கள் இறங்கி தள்ளிவிட வேண்டிய மோசமான சூழல் தொடர்கிறது. எனவே, போக்குவரத்து கழக நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Virudhunagar , Expired and turned into a trolley for many years Virudhunagar Government Buses
× RELATED விருதுநகரில் பாதாள சாக்கடை அடைப்பால்...