விருதுநகரில் அரசு மருத்துவக்கல்லூரி, குடியிருப்புகள் தரமற்ற வகையில் கட்டப்படுவதாக புகார்: உறுதி தன்மையை பரிசோதிக்க கோரிக்கை

விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் அலுவலக வளாக நிலம் களிமண் தரை, நிலத்தடி நீரும் கடும் உப்புத்தண்ணீர் என்பதால் அரசு அலுவலர் குடியிருப்புகள் 1990 கட்டப்பட்டு, 15 ஆண்டுகளில், அதாவது 2005 முதல் இடிந்து விழத் துவங்கியது. 2010ல் முழுமையாக இடிந்து விட்டன. அரசு அலுவலர் குடியிருப்புகள் இடிக்கப்பட்டு அரசு மருத்துவக்கல்லூரியும், விடுதிகளும் கட்டப்படுகின்றன. விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ஏற்கனவே இருந்த 20 கட்டிடங்கள் இடிக்கப்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டப்படுகிறது. மருத்துவக்கல்லூரி ரூ.142 கோடி, குடியிருப்பு கட்டிடங்கள் ரூ.69.11 கோடி, மருத்துவமனை வளாகம் ரூ.169 கோடி என ரூ.380 கோடி மதிப்பிலான 3 கட்டுமானங்களும் மூன்று ஒப்பந்தகாரர்களுக்கு வழங்கப்பட்டு பணிகள் நடைபெறுகிறது.

மார்ச் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு  இறுதியில் துவங்கிய பணிகளில் மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டிட கட்டுமான பணி முதல்மாடி வரை நிதானமாக கட்டப்பட்டுள்ளது. கலெக்டர் வளாகத்தில் இடிந்த குடியிருப்புகளை அகற்றி மண்பரிசோதனை, நிலத்தடி தன்மை உள்ளிட்ட பரிசோதனைகள் முறையாக செய்யாமல், அதற்கேற்ற வகையிலான கட்டுமானத்தை பின்பற்றாமல் அசுர வேகத்தில் கட்டி வருகின்றனர். வடமாநில தொழிலாளர்கள் ஊர் திரும்பி சென்ற நிலையில், 70க்கும் குறைவான தொழிலாளர்கள் மூலம் பணிகள் நடந்தது. கடந்த 7 மாதங்களில் தரைத்தளம் துவங்கி 6 மாடி கட்டிடமும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

நூற்றாண்டுகள் நிலைத்து நிற்க வேண்டிய கல்லூரி கட்டுமானத்தில் ஒவ்வொரு கட்டுமான பணி செய்ததும், அதற்குரிய கால இடைவெளி விட்டு அடுத்த கட்டுமானத்தை தொடர வேண்டும். மேற்கூரை கான்கிரீட் தளம் அமைக்கும் போது தண்ணீரை தேக்கி வைத்து குறிப்பிட்ட கால இடைவெளி விட்டு, அடுத்தமாடி கட்டுமான பணி துவங்க வேண்டும்.

ஆனால் அவசர கதியில் தூண்களை எழுப்பி, தொடர்ச்சியாக செங்கல் சுவர் வைத்து, ஒருபுறம் சுவரை எழுப்பிக் கொண்டு மறுபுறம் பூச்சு வேலையை செய்கின்றனர். செங்கல் கட்டுமானம் முழுமையாக முடிவதற்குள் பூச்சு வேலை நடக்கிறது. அவசர கதியில் திறப்பு விழாவிற்காக பணிகள் நடக்கிறது. கண்காணிக்க வேண்டிய பொறியாளர்கள் கண்காணிக்கவில்லை, தரக்கட்டுபாடு ஆய்வுகள் எதுவும் முறையாக நடக்கவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்கிறது. கட்டுமான பணியில் இருக்கும் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் செய்துதராமல் பணிகள் நடப்பதால் விபத்துகளும், உயிரிழப்புகளும் தொடர்கிறது.

நேற்று முன்தினம் 5வது மாடியில் இருந்து விழுந்த கொத்தனார் முருகன்(45) சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இழப்பீடு கோரி உறவினர்கள் நேற்று முன்தினம் இரவில் நான்குவழிச்சாலையில் மறியல் செய்தனர். சூலக்கரை போலீசார், மறியல் செய்த 50 பேர் மீதும், பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காத கட்டுமான ஒப்பந்தக்காரர் ராஜசேகரன், மேற்பார்வையாளர் பாண்டியராஜன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து ஆதித்தமிழர் பேரவை மாநில அமைப்பு செயலாளர் வீரபெருமாள் கூறுகையில், ``மருத்துவக்கல்லூரி மற்றும் குடியிருப்புகள் கட்டுமான பணிகள் தரமற்ற வகையில் அவசர கதியில் விதிமுறைகள் பின்பற்றாமல் நடப்பதாக முதல்வர், முதன்மை செயலாளர், செயற்பொறியாளர் வரை நவம்பவர் மாதமே புகார் மனு அனுப்பி, நடவடிக்கை இல்லை.

பல்லாண்டு நிலைத்து நின்று பல ஆயிரம் மருத்துவர்களை உருவாக்க வேண்டிய மருத்துவக்கல்லூரி கட்டிடம் அவசர கதியில் தரமற்ற வகையில் தண்ணீர் ஊற்றி நனைக்காமல் கட்டுகின்றனர். கட்டுமான பணிகளை நேரடியாக கண்காணித்து தரம் பரிசோதனை செய்ய தொழில்நுட்ப அலுவலர்கள் இல்லை. இதன் உறுதித்தன்மையை பரிசோதித்த பிறகே வகுப்பறைகள் மற்றும் குடியிருப்புகளை திறக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories:

>