×

வரத்து வாரிகளை வனத்துறை அடைத்துள்ளதால் அதிக மழை பெய்தும் தண்ணீரின்றி வறண்டு கிடக்கும் ஊரணி: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருமயம்: நடப்பாண்டில் அதிக மழை பெய்தும் தண்ணீரின்றி ஊரணி வறண்டு கிடக்கிறது. தைல மரங்களை பாதுகாக்க வனத்துறையினர் மேற்கொள்ளும் நடவடிக்கையால் நீர்நிலைகள் வறண்டு போனதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம் பகுதியில் கடந்த ஆண்டுகளில் யாரும் கண்டிராத வகையில் பொங்கல் பண்டிகை வரை பருவமழை தொடர்ந்து இடைவிடாமல் மாவட்டம் முழுவதும் பெய்தது. இதனால் அறுவடைக்கு தயாரான பயிர்கள் அனைத்தும் சேதம் அடைந்துள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் பெரும்பாலான நீர்நிலைகள் உடைப்பு ஏற்படும் அளவிற்கு தண்ணீர் நிரம்பி காணப்படுகின்றது. ஆனால் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பகுதி மட்டும் வறட்சியின் பிடியில் சிக்கித் தவித்து வருகின்றது. இதற்கு காரணம் அப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள தைல மரமும் அதனைப் பாதுகாக்க வனத்துறையினர் மேற்கொள்ளும் நடவடிக்கை தான் என அப்பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுபற்றி அப்பகுதி மக்களிடம் கேட்டபோது:புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளிலும் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக போதிய பருவ மழை பெய்யாததால் வயல்வெளிகள் வறண்டது. மேலும் நிலத்தடி நீர்மட்டமும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போனதால் அப்பகுதி விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேற வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டனர். அதுமட்டுமின்றி குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்படும் அபாய நிலையும் அங்கு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து அரிமளம் பசுமை மீட்பு குழு என்ற ஒரு அமைப்பை உருவாக்கி அப்பகுதியில் உள்ள ஏரி, கண்மாய், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தங்களது சொந்த நிதியில் தூர்வாரி கரையை சுற்றி மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வருகின்றனர்.

ஆனாலும் கூட நீர்நிலைகளுக்கு கடந்த காலங்களைப் போல் முறையாக தண்ணீர் வரவில்லை. இதற்கு காரணம், அரிமளத்தை சுற்றிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் வனத்துறையால் பயிரிடப்பட்டுள்ள தைல மரங்கள் உள்ளது. அவற்றை காப்பதற்காக நீர்நிலைகளுக்கு வரும் வரத்து வாரிகள், நீர்வழிப்பாதைகளை வரப்புகள், பள்ளங்களை தோண்டி வனத்துறையினர் அடைத்து வைத்துள்ளனர்.மேலும் தைல மர காடுகளை வளர்ப்பதற்காக மரங்களின் வரிசைகளுக்கு இடையே சுமார் 3 அடியில் வாய்க்காலும் வனத்தை சுற்றி உயரமான வரப்புகளும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தொடர்ந்து கன மழை பெய்தும் கூட அரிமளம் பகுதியிலுள்ள நீர்நிலைகளுக்கு மழைநீர் செல்லாததால் 20க்கும் மேற்பட்ட ஏரி, குளம், கண்மாய்கள் தண்ணீர் இன்றி வறண்டே காணப்படுகிறது. மேலும் அரிமளம் பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரியிடம் அரிமளம் பகுதி மக்கள் புகார் கொடுத்த நிலையில் அவர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் ஆய்வு செய்து சென்ற நிலையிலும் கூட வனத்துறையினர் அலட்சியமாக அமைக்கப்பட்ட வரப்புகளை அப்புறப்படுத்தவில்லை. போதிய அளவிற்கு அதிகமாக மழை பெய்தும் குளங்கள் அனைத்தும் நிரம்பாத நிலையில் கோடை காலத்தில் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே வனப்பகுதியில் உள்ள மழை நீர் தேக்கிகளை அகற்ற வேண்டுமென அரிமளம் பசுமை மீட்பு குழுவினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு ஏக்கத்தோடு கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : Urani ,forest department , Uranium dries up due to heavy rains
× RELATED வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும்...