கூகுள் சேவையை ரத்து செய்வதாக மிரட்டல்: ஆஸ்திரேலிய அரசுடன் கூகுள் நிறுவனம் மோதல்: அஞ்ச மாட்டோம் - பிரதமர் பதிலடி

வெலிங்டன்: கூகுளில் வெளியாகும் செய்திகளுக்கு கட்டணம் செலுத்தும்படி ஆஸ்திரேலிய அரசு உத்தரவிட்டதால், இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. கூகுள், பேஸ்புக் நிறுவனங்கள் ஆஸ்திரேலிய செய்தி வலைதளங்களின் செய்திகள்,  இணைப்புகள், துணுக்குகள் ஆகியவற்றை தங்களின் இணைய தளங்களில் வெளியிடுவதற்கு பிரதி பலனாக செய்தி நிறுவனங்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று ஆஸ்திரேலியா அரசு தெரிவித்தது. இது தொடர்பான செனட்  விசாரணைக்கு ஆஜரான கூகுள் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து பிரிவின் நிர்வாக இயக்குனர் மெல் சில்வா, ‘இது சட்டமாக்கப்படும் பட்சத்தில், ஆஸ்திரேலியாவில் கூகுள் தேடல் சேவையை ரத்து செய்வதை தவிர எங்களுக்கு  நிறுவனத்துக்கு  வேறு வழியில்லை. இது கூகுளை மட்டுமின்றி ஆஸ்திரேலியமக்களையும்  பாதிக்கும்,’ என்று கூறினார்.

இதற்கு உடனடியாக பதிலளித்து பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ‘கூகுள் நிறுவனத்தின் மிரட்டலுக்கு அரசு அஞ்சாது. ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்னவெல்லாம் செய்யலாம் என்பதைதான் அரசு விதிகளாக உருவாக்கி  உள்ளது. இவை நாடாளுமன்றத்தின் மூலம் அரசால் நிறைவேற்றப்பட்டது. அதன்படிதான் அரசு செயல்படும்,’ என்று காட்டமாக பதில் அளித்துள்ளார். இதனால், கூகுள் - பிரதமர் ஸ்காட் இடையிலான மோதல் தீவிரமாகி இருக்கிறது.

வரவு 27,000 கோடி செலவு 335 கோடி

* இதர நாடுகளை போல் ஆஸ்திரேலியாவிலும் கூகுள் தேடல் சேவையை தான் மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். ஆஸ்திரேலியாவின் 95 சதவீத தேடல்கள் கூகுள் தேடல் சேவை மூலம்தான் பெறப்படுகிறது.

* ஆஸ்திரேலியாவில் இருந்து ரூ.27,000 கோடி வருவாய் கிடைத்ததில், கூகுள் நிறுவனம் அரசுக்கு ரூ.335 கோடி மட்டுமே வரி செலுத்தி உள்ளது.

Related Stories:

>