×

நேர்ல வர வேணாம்... டி.வி.ல பாத்துக்கவும் கொரோனா தொற்று காரணமாக குடியரசு தின கலைநிகழ்ச்சி ரத்து: தியாகிகளுக்கு வீடுகளில் சென்று மரியாதை

சென்னை: கொரோனா தொற்று பரவலை தவிர்க்கும் விதமாக கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகிறது. மேலும், மாவட்டந்தோறும் சுதந்திர போராட்ட வீரர்களின் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் மூலம் பொன்னாடை போர்த்தி, உரிய  மரியாதை அளித்திட மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய குடியரசு திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் வரும் 26ம் தேதி காலை 8 மணிக்கு தேசியக் கொடி ஏற்றி சிறப்பிப்பார். ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின நிகழ்ச்சியில் சுதந்திரப்  போராட்ட தியாகிகளும், பொதுமக்களும், மாணவர்களும், பள்ளிக் குழந்தைகளும் பங்கேற்பர்.

கொரோனா தொற்றால் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு, பள்ளிக் குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் நிகழ்த்தும் கலைநிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட்டுள்ளன. சுதந்திர போராட்ட வீரர்களின் வயது மூப்பினை  கருத்தில் கொண்டும், கொரோனா தொற்று பரவலை தவிர்க்கும் விதமாகவும் மாவட்டந்தோறும் சுதந்திர போராட்ட வீரர்களின் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் மூலம் பொன்னாடை போர்த்தி, உரிய மரியாதை அளித்திட மாவட்ட ஆட்சித்  தலைவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. குடியரசு தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி மற்றும் வானொலியில் நேரடியாக ஒளி/ஒலி பரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தை தவிர்க்கும் வகையில் இந்தாண்டு, பொதுமக்கள், மாணவர்கள், பள்ளிக் குழந்தைகள் மற்றும் மூத்த  குடிமக்கள், விழாவைக் காண நேரில் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குடியரசு தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி, வானொலியில் கண்டு, கேட்டு மகிழுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.



Tags : art show ,Republican ,martyrs ,home , Want to come live ... Republic Day concert canceled due to Corona infection on TV: Martyrs go home and pay their respects
× RELATED திருச்செந்தூர் நகராட்சியில்...