×

மாமல்லபுரத்தில் ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்ட 15 டன் விநாயகர் சிலை மும்பைக்கு பயணம்: வழிநெடுகிலும் பக்தர்கள் வழிபாடு

சென்னை:  மாமல்லபுரத்தில் இருந்து சென்னை செல்லும் இ.சி.ஆர் சாலை அருகே உள்ள பாபா ஸ்டோன்ஸ் சிற்பக்கலை கூடம் உள்ளது. இங்கு, மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள  ஜீவ்தானி தேவி சான்ஸ்தன் கோயிலில் உள்ள  கருவறையில் பிரதிர்ஷ்டை செய்வதற்காக 10 அடி உயரத்தில், 5 அடி அகலத்தில் விநாயகர் சிலை செய்ய ஆர்டர் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, 15 டன் எடையுள்ள ஒரே கல்லில் 10 அடி உயரத்தில் மூசிக வாகனம் தாங்கிய ஆதார பீடத்துடன், அமர்ந்த கோலத்தில் 5 அடி அகலத்தில் 4 கரங்களில் லட்டு, அபயம் தாங்கிய திருக்கோலத்தில் அமர்ந்த நிலையில், சைவ ஆகம  முறைப்படி விநாயகர் சிலையை பாபா ஸ்டோன்ஸ் உரிமையாளர் சிற்பி பாலன் அறிவுமணி தலைமையில் 20க்கும் மேற்பட்ட சிற்பிகள் கடந்த மூன்று மாதமாக வடிவமைத்து வந்தனர்.

பின்னர், இந்த விநாயகர் சிலை செதுக்கும் பணி முழுமையாக முடிந்த நிலையில், கிரேன் மூலம் ஒரு கன்டெய்னர் லாரியில் சிலை தூக்கி வைக்கப்பட்டது. முன்னதாக, சைவ ஆகம முறைப்படி மூன்று கால பூஜைகள் செய்து பாலன் அறிவுமணி  மற்றும் 10க்கும் மேற்பட்ட சிற்பிகள் கற்பூரம் ஏற்றியும், தேங்காய் உடைத்தும் வழிபட்டு அனுப்பி வைத்தனர். அப்போது, வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து வழிபட்டனர்.  இந்த சிலை வரும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் மும்பையில் கும்பாபிஷேகம் செய்து  ஜீவ்தானி தேவி சான்ஸ்தன் கோயிலின் கருவறையில் வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Tags : Ganesha ,Mamallapuram Travel ,Mumbai ,Devotees , 15 ton Ganesha statue made of a single stone at Mamallapuram on a trip to Mumbai
× RELATED கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்